விஜய் - இயக்குநர் அட்லி கூட்டணியில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் தீபாவளி தினத்தன்று வெளியாகிறது. ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளது. திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு பிகில் படத்தின் ட்ரெய்லர் வெளியான நிலையில், இதனை பெரிய திரையில் வெளியிடப்படும் என்று சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்க நிர்வாகம் அறிவித்திருந்தது.
இதனால் ரோகிணி திரையரங்கம் முன்பு 2000க்கும் அதிகமான விஜய் ரசிகர்கள் குவிந்தனர். ஆனால் மாலை ஆறு மணியாகியும் ரோகிணி திரையரங்கில் பிகில் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படவில்லை. இதனால் கோபமடைந்த ரசிகர்கள் திரையரங்க வாசலில் கரகோசங்களை எழுப்பி சத்தமிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்தாலும் விஜய் ரசிகர்கள் பிகில் பட ட்ரெய்லரை தங்களது தொலைபேசியில் பார்த்து ரசித்தனர். ட்ரெய்லர் குறித்து தெரிவித்த ரசிகர்கள், 'வெறித்தனமாக இருந்தது, ஸ்கீரினில் பார்க்கவில்லை, ஃபோனில்தான் பார்க்க முடிந்தது. பலத்த எதிர்பார்ப்புடன் வந்தோம். ரொம்ப ஏமாற்றத்துடன் செல்கிறோம். விஜய் படம் என்றாலே பிரச்னைதான் ஏன்? விஜய் சொன்ன வார்த்தைக்காக நாங்க அமைதியா இருக்கோம்' என்றனர்.
பிகில் ட்ரெய்லர், ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ், மிரட்டலான பின்னணி இசை, மாஸ் காட்சிகள் என விஜய் படத்துக்கே உண்டான அனைத்து அம்சங்களுடன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆஹா அலப்பறைய ஆரம்பிச்சுட்டாய்ங்கப்பா... இந்திய அளவில் ட்ரெண்டாகும் #BigilTrailerDay ஹேஸ்டேக்