'பீட்சா', 'சூதுகவ்வும்', 'அட்டகத்தி', 'இன்று நேற்று நாளை' உள்ளிட்ட வித்தியாசமான மக்கள் மனத்தில் இடம்பிடித்த படங்களைத் தயாரித்தவர் சி.வி. குமார். இவர் 'மாயவன்', 'கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்' ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
![](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-kumar-kotravai-script-7205221_29042021114952_2904f_1619677192_77.jpg)
இவர் தற்போது '4ஜி', 'டைட்டானிக்: காதலும் கவுந்து போகும்' ஆகிய படங்களைத் தயாரித்துவருகிறார். தற்போது இவர் 'கொற்றவை' என்னும் புதிய படத்தை இயக்கிவருகிறார்.
இந்தப் படத்தில், சின்னத்திரையில் நடிகை குஷ்பு நடுவராகப் பங்குபெற்ற 'அழகிய தமிழ் மகன்' நிகழ்ச்சியில் 'சாகச தமிழ் மகன் விருது' பெற்ற ராஜேஷ் கனகசபை இதில் நாயகனாக அறிமுகமாகிறார்.
மேலும் இவருடன் சந்தனா ராஜ், சுபிக்ஷா வேலு பிரபாகரன், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
![](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-kumar-kotravai-script-7205221_29042021114952_2904f_1619677192_886.jpg)
பிரகாஷ் ருத்ரா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். கடந்தாண்டு டிசம்பர் மாதம் காரைக்குடி, சென்னை, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பைப் படக்குழுவினர் தொடங்கினர்.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் மேற்கொண்டுவந்த நிலையில், தற்போது அதுவும் முடியும் தருவாயில் உள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
![](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-kumar-kotravai-script-7205221_29042021114952_2904f_1619677192_560.jpg)
'கொற்றவை' படம் குறித்து சி.வி. குமார் கூறுகையில், "ஏற்கனவே வரலாற்றில் நடந்த ஒரு நிகழ்வு இப்போதும் தொடர்வதுபோல கதை அமைக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்பும் பின்புமான காலத்துக்கு ரசிகர்களை இப்படம் அழைத்துச்சென்று பரவசத்தில் ஆழ்த்தும். முதல் பாகத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து டப்பிங் உள்ளிட்ட பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன.
‘கொற்றவை: தி லெகசி’ என்று முதல் பாகத்துக்குப் பெயரிட்டுள்ளோம். சீரான இடைவெளியில் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகி, மூன்றாவது பாகத்தில் பரபரப்பான கிளைமேக்ஸுடன் கொற்றவை நிறைவடையும்.
புதையல் வேட்டை தொடர்பான கதையாக அமைந்துள்ள கொற்றவையில், 2000 ஆண்டுகளுக்கு முன் மறைக்கப்பட்ட புதையலைக் கண்டறிய நாயகன் எடுக்கும் சாகச முயற்சிகள் மெய்சிலிர்க்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளன. ஏன் அந்தப் புதையல் மறைக்கப்பட்டதென்பதும் விறுவிறுப்பாக விவரிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.