சென்னை: மலையாளத்தில் வெற்றிபெற்ற மகேஷிண்டே பிரதிகாரம் படத்தின் மூலம் நாயகியாக லிஜோமோல் ஜோஸ் அறிமுகமானார். தமிழில் சசி இயக்கத்தில் வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் மூலம் அறிமுகமான இவர், சித்தார்த்துக்கு மனைவியாகவும், ஜி.வி. பிரகாஷுக்கு அக்காவாகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து தீதும் நன்றும் என்ற படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்தார். பல்வேறு முன்னணிப் படங்களில் நடித்துவந்த லிஜோமோல் ஜோஸ் திடீரென்று திருமணம் செய்துகொண்டார். இவரது கணவர் அருண் ஆண்டனி. இவர்களுடைய திருமணம் நேற்று (அக். 5) கேரளாவில் கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்றுள்ளது. இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.
இந்தத் திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து, அவருடன் நடித்த நடிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துவருகிறார்கள்.