கன்னட திரையுலகில் போதைப்பொருள் அதிகளவில் புழக்கத்தில் உள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய குற்றப்பிரிவு அலுவலர்கள் (சிசிபி) விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக நடத்திய விசாரணையில், கன்னட சின்னத்திரை நடிகை அனிகாவிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்களை கைப்பற்றினர்.
இதனையடுத்து நடிகை ராகினி திவேதி கைதுசெய்யப்பட்டதன் தொடர்ச்சியாக சஞ்சனா கல்ராணியும் செப்டம்பர் 9ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஹோட்டல் அதிபர்கள் விரேன் கண்ணா, முகமது அனூப், ராகுல் ஷெட்டி, பிரித்வி ஷெட்டி, முன்னாள் ஜனதா தள அமைச்சர் ஜீவராஜ் ஆல்வாவின் மகன் ஆதித்யா ஆல்வா உள்ளிட்ட 29 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கிற்காக ஜாமீன் வேண்டி சஞ்சனா அக்டோபர் மாதம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது. தொடர்ந்து நவம்பர் மாதமும் ஜாமீன் தாக்கல் செய்தார். அதனையும் நீதிமன்றம் மறுத்தது. அப்போது இவருக்கு ஜாமீன் வழங்கியால் இந்த வழக்கில் இடையூறு ஏற்படலாம் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சஞ்சனா கல்ராணிக்கு கர்நாடக உயர் நீதிமன்றம், மாதம் இரண்டு முறை நேரில் ஆஜராகும் படியும் காவல்துறையினரின் விசாரணைக்கு முறையாக ஒத்துழைக்கும்படியும் நிபந்தனைகளை கூறி ஜாமீன் வழங்கியுள்ளது.