ட்ரெட்மில்லில் சாகசம் செய்ய நினைத்து பலர் விழுந்து மூக்கில் அடிபடும் வீடியோக்கள் வைரலாகி சிரிப்பலையை உண்டாக்கும். ஆனால், நடிகர் கமலின் தீவிர ரசிகரான ஒருவர் ஓடும் ட்ரெட்மில்லில் புல் பார்மில் அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம்பெற்ற 'அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ' பாட்டுக்கு நடனம் ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது.
அஷ்வின் குமார் என்ற அந்த இளைஞர் அந்த வீடியோவில், கமல் போலவே முக பாவனைகளுடன் நடனம் ஆடி அசத்தியிருப்பார். இவர், எனை நோக்கி பாயும் தோட்டா, துருவங்கள் பதினாறு ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். மேலும், ரஜினி போன்று பேசியும் அசத்தியது குறிப்பிடத்தக்கது. தனது சமூகவலைத்தளப்பக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் சினிமாத்துறையில் செய்த சாதனைகள் குறித்து வெளியிட்டும் வருகிறார்.
தீவிர கமல் ரசிகரான இவரது வீடியோக்களை கமல் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் இளைஞர் அஷ்வின் குமாரை பாராட்டி ட்விட் செய்துள்ளார்.
அதில், "நான் செய்த நல்வினைகள் என் ரசிகரை சென்று அடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு. என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே. என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை" என பதிவிட்டுள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: 17வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் ஜெயம் ரவி!