பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் 2014 ஆம் ஆண்டு தன்னைப் பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் குற்றஞ்சாட்டினார். அதில், மார்ச் 9 2014ஆம் ஆண்டு டெக்ஸாஸின் ஆஸ்டின் பகுதியில் இருக்கும் ஃபோர் சீஸன்ஸ் ஹோட்டலில், ஜஸ்டின் பீபரால், தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியதாக பதிவிட்டிருந்தார். இந்த பதிவு சமூகவலைதளத்தில் பெரும் சர்ச்சையும் விவாதப் பொருளாகவும் மாறின.
இதற்கு ஜஸ்டின் பீபர் மறுப்பு தெரிவித்து ட்வீட் செய்திருந்தார். அதில் அந்த பெண் கூறியிருந்த அதே நேரத்தில் நான் சவுத் பை சவுத்வெஸ்ட் இசை விழாவில் விருந்தினராக பங்கேற்றேன். இந்தக் குற்றச்சாட்டு உண்மையின் அடிப்படையில் சாத்தியமற்றது என குறிப்பிட்டிருந்தார்.
மேலும் பாலியல் வன்கொடுமை பற்றிய ஒவ்வொரு புகாரும் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட வேண்டும். அதனால்தான் இதில் என் பதிலை கூறியிருக்கிறேன். ஆனால் உண்மையின் அடிப்படையில் இந்தச் சம்பவம் நடத்திருக்கவே சாத்தியமில்லை. எனவே நான் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப் போகிறேன் என்றும் கூறினார்.
அதே போல் 2015 ஆம் ஆண்டு 26 வயதான பாடகி ஒருவர் தன்னை நியூயார்க்கில் வைத்து ஜஸ்டின் பீபர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக கூறினார். இவரது குற்றச்சாட்டையும் ஜஸ்டின் பீபர் மறுத்துத்துள்ளார்.
தற்போது இந்த இரண்டு பெண்களும் தனக்கு தலா 10 மில்லியன் அமெரிக்கன் டாலர் வழங்க வேண்டும் எனக்கூறி அவதூறு வழக்கு ஒன்றை ஜஸ்டின் பீபர் தாக்கல் செய்துள்ளார்.