நடிகர் ஜெயம் ரவியின் 25ஆவது படமான ’பூமி’ திரைப்படம் விவசாயத்தை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நித்தி அகர்வால் நடிக்கிறார்.
தெலுங்கு நடிகையான நித்தி அகர்வால், இந்தப் படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மேலும், காமெடி நடிகர் சதீஷ், ராதா ரவி, சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமையா எனப் பலரும் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.
இந்தி நடிகர் ரோனித் ராய் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். தூட்லே ஒளிப்பதிவு செய்கிறார்.
ஜெயம் ரவியின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ஹோம் மூவி மேக்கர்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. ரோமியோ ஜூலியட், போகன் என ஜெயம் ரவிக்கு இரண்டு ஹிட் படங்களை கொடுத்த லக்ஷ்மண் மூன்றாவது முறையாக, பூமி படத்தில் அவரை இயக்குகிறார்.
முன்னதாக, இப்படத்தின் டீஸரை உழைப்பாளர் தினமான மே 1ஆம் தேதி படக்குழுவினர் வெளியிட்ட நிலையில், தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ’தமிழன் என்று சொல்லடா’ என்னும் பாடலை செப்டம்பர் 10ஆம் தேதி வெளியிட உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.