சென்னை: ஹாட்ரிக் ஹிட் கொடுத்துள்ள ஜெயம் ரவி அடுத்த படத்தில் விவசாயம் பற்றி பேசவுள்ளராம்.
கடந்த ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'டிக் டிக் டிக்', 'அடங்கமறு' ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இவர் நடித்து, 90ஸ் கிட்ஸ்களின் வாழ்கையையும் மனிதர்கள் மறந்த மனிதத்தையும் எடுத்துரைக்கும் விதமாக அமைந்த 'கோமாளி' படம் இந்த ஆண்டு ஆகஸ்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது.
இந்த நிலையில், ஹாட்ரிக் ஹிட் கொடுத்த குஷியில் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இது ஜெயம் ரவியின் 25ஆவது படமாகும். இந்தப் படத்தை ஜெயம் ரவியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிக்க, ரோமியோ ஜூலியட், போகன் படங்களை இயக்கிய லக்ஷ்மன் இயக்குகிறார்.
அகில உலக பிரச்னையாக கருதப்படும் விவசாயத்தை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்துக்கு 'பூமி' என்று தலைப்பு வைத்துள்ளனர். படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக தெலுங்கு நடிகை நீத்தி அகர்வால் நடிக்கிறார். காமெடியனாக சதீஷ் நடிக்கிறார். இசை - டி. இமான். தற்போது படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றுவருகிறது.