நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 'ஜெய் பீம்' (Jai Bhim) திரைப்படம் ஓடிடியில் வெளியாகி ஒருபுறம் நாடு தழுவிய வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், மறுபுறம் படம் தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன.
அன்புமணியின் 9 கேள்விகள்
தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி, விசிக தலைவர் தொல்.திருமாவாளவன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும், இயக்குநர் ரஞ்சித், பாரதிராஜா உள்ளிட்ட பல இயக்குநர்கள், நடிகர்களும் படத்தைப் பாராட்டியும் ஆதரவு தெரிவித்தும் வந்தனர்.
இந்நிலையில், படத்தில் வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை வெடித்தது. தொடர்ந்து, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் (Anbumani Ramadoss) ஒன்பது கேள்விகளுடன் கூடிய கண்டன அறிக்கையை வெளியிட்டார்.
பூதாகரமான சர்ச்சை
அதனைத் தொடர்ந்து சர்ச்சை பூதாகரமான நிலையில், சூர்யாவைத் தாக்குவோருக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்றும் கூட அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து நடிகர் சூர்யாவின் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய காவல் வழங்கப்பட்டது. அன்புமணி தொடர்ந்து இப்படத்துக்கு கண்டனம் தெரிவித்து வந்தார்.
இந்நிலையில் தற்போது எந்த ஒரு தனிப்பட்ட நபரையோ, எந்த ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தையமோ அவமதிக்கும் எண்ணம் தனக்கு சிறிதளவும் இல்லை என படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் அறிக்கை
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு முதலமைச்சர், 'ஜெய் பீம்' திரைப்படத்தைப் பார்த்துப் பாராட்டியதோடு பழங்குடி மக்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதியான நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் இத்திரைப்படத்தின் நோக்கத்தை முழுமை பெறச் செய்தார். அதற்காக எனது மனப்பூர்வமான நன்றிகளை நமது அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
’காலண்டரின் நோக்கம் வேறு’
ஜெய் பீம்' திரைப்படத்துக்கு எல்லா தரப்பினரிடமிருந்தும் கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி அளித்தது. அதேபோல, இத்திரைப்படத்துக்கு எழுந்த சில எதிர்மறைக் கருத்துகள் நான் சற்றும் எதிர்பாராதவை.
பின்னணியில் மாட்டப்படும் ஒரு காலண்டர் படம், ஒரு சமூகத்தைக் குறிப்பதாகப் புரிந்து கொள்ளப்படும் என நான் அறியவில்லை. 1995 காலத்தை பிரதிபலிப்பதே அந்த காலண்டரின் நோக்கமே அன்றி, குறிப்பிட்ட சமூகத்தின் குறியீடாக அதைக் காட்ட வேண்டும் என்பது எங்கள் யாருடைய நோக்கமும் அல்ல.
’காலண்டரை ஒருவர்கூட கவனிக்கவில்லை’
![ஜெய் பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் அறிக்கை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/whatsapp-image-2021-11-21-at-135505_2111newsroom_1637485244_197.jpeg)
![ஜெய் பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் அறிக்கை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/whatsapp-image-2021-11-21-at-135506_2111newsroom_1637485244_789.jpeg)
சில வினாடிகள் மட்டுமே வருகிற அந்தக் காலண்டர் படம் படப்பிடிப்பின்போதும், 'போஸ்ட் புரடெக்ஷன் பணியின்போதும் எங்கள் யாருடைய கவனத்திலும் பதியவில்லை. அமேசான் ப்ரைமில் படம் வெளிவரும் முன்பே பெரிய திரையில் பல்வேறு தரப்பினரும் திரைப்படத்தைப் பார்த்தனர். அப்போது கவனத்திற்கு வந்திருந்தாலும் கூட , படம் வெளிவரும் முன்பே அதை மாற்றி இருப்போம்.
நவம்பர் மாதம் 1ஆம் தேதி இரவு அமேசானில் படம் வெளிவந்தும், காலண்டர் படம் பற்றி சமூக வலைதளங்கள் மூலம் அறிந்தவுடன், உடனடியாக நவம்பர் 2ஆம் தேதி காலையே அதை மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. யாரும் கேட்பதற்கு முன்பே, அந்தக் காலண்டர் படம் மாற்றப்பட்ட பிறகு, எங்களுக்குத் தனிப்பட்ட உள்நோக்கம் எதுவும் இல்லை என்பது எல்லோருக்கும் புரியும் என்று நம்பினேன்.
’சூர்யாவை பொறுப்பேற்கச் சொல்வது துரதிர்ஷ்டவசமானது'
இயக்குநராக நான் மட்டுமே பொறுப்பேற்க வேண்டிய விஷயத்துக்கு சூர்யாவை பொறுப்பேற்கச் சொல்வது துரதிர்ஷ்டவசமானது. தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இத்திரைப்படத்தில் சூர்யா, பழங்குடியின மக்களின் துயரங்களை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டிருந்தார்.
இயக்குநராக என் பொருட்டு அவருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன். அனைத்து சமூகத்தினருக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்படுத்தும் கலைவடிவமே திரைப்படம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இத்திரைப்பட ஆக்கத்தில் எந்தவொரு தனிப்பட்ட நபரையோ, எந்தவொரு குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்.
வருத்தம்
இதன் பொருட்டு மன அடைந்தவர்களுக்கும், புண்பட்டவர்களுக்கும் என் உளப்பூர்வமான வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இக்கட்டான சூழலில் அக்கறையோடு எங்களுடன் நிற்கிற திரையுலகத்தினருக்கும், அரசியல், இயக்கங்களுக்கும், சமூக செயல்பாட்டாளர்களுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும், ஆதரவளித்த முகமறியா அனைத்து நட்புகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'ஆர்யன் கான் வழக்கில் முதன்மை ஆதாரம் இல்லை' - மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு விவரம் வெளியீடு