தெறி, மெர்சல் பட வெற்றியைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் - அட்லி கூட்டணி இணைந்துள்ளனர். நயன்தாரா, விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். பிரம்மாண்ட செலவில் தயாராகும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் பரியேறும் பெருமாள் புகழ் கதிர், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். விஜய் 63 திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருப்பதால் இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அவ்வப்போது, படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் விஜய், ரசிகர்களை சந்தித்து வரும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், 'விஜய் 63' படத்தின் முக்கிய அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளதால் சினிமா ரசிகர்கள் பயங்கர குஷியில் உள்ளனர். ஆரண்ய காண்டம் படத்தில் தாதாவாக மிரட்டிய பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம். வில்லன் கதாபாத்திரத்தில் அசால்ட்டாக கெத்து காட்டும் ஜாக்கி ஷெராஃப் விஜய்யைஎதிர்த்து சண்டை போடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.