தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக இருந்து வில்லனாக அறிமுகமானவர் ஆர்.கே.சுரேஷ். 'தாரை தப்பட்டை', 'மருது' போன்ற படங்களில் இவர் ஏற்று நடித்த கதாப்பாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து 'பில்லா பாண்டி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மேலும், ஒரு சில படங்களில் கதாநாயகனாக நடித்து ஆர்.கே.சுரேஷ், தற்போது மலையாள இயக்குநர் மஞ்சித் திவாகர் இயக்கும் 'கொச்சின் ஷாதி அட் சென்னை 03' என்னும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். தமிழ் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.
ஆர்யா ஆதி இண்டர்நேஷ்னல் சார்பில் அப்துல் லத்தீப் வடுக்கோட் தயாரித்துள்ள இப் படத்தில், ஆர்.கே.சுரேஷ், வினோத் கிருஷ்ணன், சிவாஜி குருவாயூர், சினோஜ் வர்கீஸ், நேகா சக்சேனா, சார்மிளா ஆகியோர் நடித்துள்ளனர். கொச்சினிலிருந்து சென்னைக்குப் பயணிக்கும் ஒரு பெண்ணின் கதாப்பாத்திரத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது. கதையில் வரும் பாத்திரங்கள் 70% தமிழும் 30% மலையாளமும் பேசுகின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் பாலக்காடு, கொச்சின், குருவாயூர், நாகர்கோவில் , மார்த்தாண்டம், கோவை, சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.
இப்படம் குறித்து இயக்குநர் மஞ்சித் திவாகர் கூறுகையில், "நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண் பணக்கார பையனை நம்பி ஏமாறுகிறாள். அவனிடம் காதலில் விழுந்து கருவுறுகிறாள் ஷாதி என்கிற ஷாதிகா. கருவைக் கலைக்க ஷாதி சென்னை செல்கிறாள். போகிற வழியிலும், சென்னை சென்ற பின்பும் அவளுக்கு என்ன நேர்கிறது? அவள் எவற்றையெல்லாம் சந்திக்கிறாள் என்பதே கதை" என்றார்.