சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் நலன் கருதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கமும் இணைந்த ஒருங்கிணைந்த தயாரிப்பாளர்கள் கூட்டுக்குழு கலந்தாய்வு கூட்டம் நடத்தியது. அதில், முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
குறிப்பாக, தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் பாதிக்கப்படாத வண்ணம் கோயம்புத்தூர் மாநகரில் ஞாயிற்றுக் கிழமைகளில் மூடி இருக்கும் திரையரங்குகளை திறக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலினிடம் ஒருங்கிணைந்த தயாரிப்பாளர்கள் கூட்டுக்குழு சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
எங்களது கோரிக்கையை கனிவுடன் ஏற்று, தாயுள்ளத்தோடு பரிசீலனை செய்து தற்போது கோயம்பத்தூர் மாநகரில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்கி ஞாயிற்றுக் கிழமைகளில் திரையரங்குகளை திறந்துகொள்ளலாம் என்ற அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. இது தமிழ் திரையுலகினருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தயாரிப்பாளர் கூட்டுக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க உறுப்பினரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கும், அரசாணை வெளியிட உறுதுணையாக இருந்த தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கும் தமிழ் திரையுலகினரின் சார்பாக நன்றி தெரிவித்து தயாரிப்பாளர் கூட்டுக்குழு தீர்மானம் இயற்றியுள்ளது.
இதையும் படிங்க: மு.க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்த திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர்!