சென்னை: ஹன்சிகா நடிக்கவிருக்கும் திகில் கலந்த நகைச்சுவைப் படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார் பிரபல கிரிக்கெட் வீரர்.
கதையின் நாயகியாக மஹா என்ற படத்தில் நடித்துவருகிறார் ஹன்சிகா. காவி உடையில் சுருட்டு பிடித்து புகைவிடுவது, ரத்தம் நிரம்பிய பாத் டப்பில் கையில் கத்தி வைத்துக்கொண்டு குளிப்பது என அடுத்தடுத்து படத்தின் போஸ்டர்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார்.
ஹன்சிகாவின் 50ஆவது படமான இதில் சிம்பு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இயக்குநர் லக்ஷ்மன் உதவியாளர் ஜாமீல் படத்தை இயக்கிவருகிறார்.
இந்த நிலையில், திகில் கலந்த நகைச்சுவைப் படமொன்றில் கமிட்டாகியுள்ளார் ஹன்சிகா. தமிழில் வெளியான முதல் ஸ்டீரியோஸ்கோபிக் 3டி படமான அம்புலி இயக்குநர்கள் ஹரி ஷங்கர் - ஹரீஷ் நாரயணன் இந்தப் படத்தை இயக்கவுள்ளனர்.
இதையடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார். ஏற்கனவே மலையாளம், இந்தி, கன்னட படங்களில் நடித்துள்ள அவர், ஹன்சிகாவின் படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
![India team pacer to play a villian for hansika horror-comedy flick](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/sreesanth-in-hansika-movie_1210newsroom_1570869152_495.jpg)
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் பார்த்திபன், சனம் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஸ்ரீவாரி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் சென்னையில் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு கோடையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனராம்.