சென்னை: 'தமிழரசன்' படத்துக்காக முதன் முறையாக இசைஞானி இளையராஜா வீட்டில் பின்னணி இசைக் கோர்ப்பு பணிகள் நடைபெற்றன.
எஸ்.என்.எஸ். மூவிஸ் நிறுவனம் தயாரித்து, பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் 'தமிழரசன்'. இந்தப் படத்தில்
விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துவருகிறார்.
ஏற்கனவே இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தற்போது படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பு வேகமாக நடந்துவருகிறது.
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும், பிரசாத் ஸ்டுடியோவுக்கும் கடந்த சில மாதங்களாக பிரச்னைகள் ஏற்பட்டன. இதையடுத்து முதன் முறையாக 'தமிழரசன்' படத்துக்காக தன் வீட்டிலேயே வைத்து பின்னணி இசையை அமைத்துவருகிறார் இளையராஜா.
இவரது 40 ஆண்டுகால இசைப் பயணத்தில் பின்னணி இசையை தன் வீட்டில் அமைத்தது இல்லை. ஆனால் தற்போது 'தமிழரசன்' படத்துக்காக ஒட்டுமொத்த இசைக்கலைஞர்களையும் தனது வீட்டுக்கு வரவழைத்து, பின்னணி இசையை நேரலையாக அமைத்து அசத்தியிருக்கிறார்.
இதையும் படிங்க: இளையராஜா-பிரசாத் ஸ்டுடியோ விவகாரம் - சமரச தீர்வு மையத்தை அணுக உத்தரவு
இதுவரை ஒரு இசையமைப்பாளர் ஹீரோவாக நடித்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்தது இல்லை. அந்த வகையில், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள 'தமிழரசன்' படத்துக்குத்தான் இளையராஜா முதன் முறையாக இசை அமைத்துள்ளார்.