சென்னை: தமிழ்த் திரையுலகில் ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் (Skyman Films International) என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம், கலைமகன் முபாரக் பல தரமான படைப்புகளைத் தயாரித்துவருகிறார்.
இந்நிலையில் இவரது தயாரிப்பில், விமர்சன ரீதியில் பாராட்டுகளைப் பெற்ற சீனு ராமசாமி - ஜிவி பிரகாஷ் கூட்டணியில் உருவாகியுள்ள 'இடிமுழக்கம்' படப்பிடிப்பு முழுமையாக நிறைவுபெற்றுள்ளது.
சிறப்பான இரு தருணங்கள்
இதனையடுத்து தமிழ்நாட்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களைப் பசுமையாக்கிய கர்னல் ஜான் பென்னிகுவிக்குக்குப் படக்குழுவினர் மரியாதை செலுத்தினர்.
இதில் நடிகை காயத்திரி நாயகியாகவும், சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ். பாஸ்கர், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
இது குறித்து கலைமகன் முபாரக் பேசுகையில், “எங்கள் அனைவருக்கும் இது ஒரு சிறப்பான தருணம். அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று 'இடிமுழக்கம்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. மற்றொன்று பென்னிகுவிக்குக்கு மரியாதை செலுத்தியது.
வெளியீட்டுத் தேதிகள் விரைவில் அறிவிப்பு
தென் மாவட்டங்களுக்கு அவர் ஆற்றிய தொண்டு காலத்தால் அழியாதது. படப்பிடிப்பை குறிப்பிட்ட நேரத்தில் முடித்ததற்கு, சீனு ராமசாமிக்கு நான் நன்றி சொல்லிகொள்கிறேன். இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் படப்பிடிப்பைத் திட்டமிட்டபடி முடிப்பது சாதாரண காரியம் அல்ல.
மொத்தப் படக்குழுவும், படத்தினைச் சரியான நேரத்தில் முடிக்க உறுதுணையாக இருந்தது. படத்தின் முதல் பார்வை, ட்ரெய்லர், ஆடியோ வெளியீடு ஆகியவற்றின் தேதிகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளோம்” என்றார்.
இதையும் படிங்க: கேம் ஆரமிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி... வலிமை பட 'கிளிம்ப்ஸ்' ரிலீஸ்!