மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான டொவினோ தாமஸ், தற்போது வி.எஸ். ரோகித் இயக்கத்தில் 'களா' (Kala) என்கிற படத்தில் நடித்துவருகிறார்.
இப்படத்தின் சண்டைக்காட்சி படப்பிடிப்பில் டொவினோவின் வயிற்றுப்பகுதியில் அடிபட்டது. இருப்பினும் இதைப் பொருட்படுத்தாமல் டொவினோ தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.
இந்நிலையில், டொவினோவிற்கு வயிற்றுவலி அதிகரித்துள்ளது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது டொவினோ உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், "டொவினோ தாமஸ் எங்கள் மருத்துவமனையில் விபத்து - அவசர சிகிச்சை பிரிவில், அக்டோபர் 7 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடும் வயிற்றுவலி இருந்தது. அவருக்கு வயிற்றுக்குள் குடலை சுற்றியுள்ள கொழுப்புச்சத்தில் ரத்தக்கட்டு இருப்பது தெரியவந்தது.
அவருக்கு ரத்தப்போக்கு இல்லை என்பதால் 48 மணி நேர கண்காணிப்பில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளார். அவருடைய ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவருக்கு ஆன்டிபயோடிக்குகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 24 மணி நேரமாக அவரது உடல்நிலை சீராக உள்ளது. மீண்டும் ரத்தப்போக்கு ஏற்படும் அறிகுறிகள் இல்லை. 48 மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு சிடி ஆஞ்சியோகிராம் எடுக்கப்பட உள்ளது.
அதுவரை அவர் தீவிர சிகிச்சை கண்காணிப்பில் இருப்பார். அவரது உடல்நிலை மோசம் அடைந்தால் உடனடியாக அவருக்கு லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை செய்யப்படும். தற்போது வரை அவரது உடல்நிலை சீராகவும் அதிகமாக உள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.