தமிழ் ரசிகர்களை ஹோம்லி லுக்கில் மயக்கி கனவுக்கன்னியாக வலம்வந்தவர் புன்னகை அரசி சினேகா. இவர் பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளின் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட சினேகா துபாயில் படித்து வளர்ந்தபின் அவருடைய குடும்பம் தமிழ்நாட்டுக்குக் குடிபெயர்ந்தது. 'இங்கணே ஒரு நிலாபக்ஷி' என்னும் மலையாளப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
என்றும் 'என்னவளே'
தொடர்ந்து தமிழில் சுசி கணேசனின் 'விரும்புகிறேன்' திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அந்தப் படம் வெளியாகத் தாமதமாகவே அப்போது மாதவனுக்கு ஜோடியாக நடித்து 2001இல் வெளியான 'என்னவளே' சினேகாவை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து இயக்குநர் லிங்குசாமியின் முதல் படமான ஆனந்தம் படத்தில் நடித்தார். பின்னர், இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் 100ஆவது படமான 'பார்த்தாலே பரவசம்', கமல் ஹாசன் நடித்த 'பம்மல் கே. சம்பந்தம்' ஆகிய படங்களில் இரண்டாம் நாயகியாக நடித்துக் கவனம் பெற்றார்.
உன்னை நினைத்து
2002இல் நட்பின் சிறப்பைக் கொண்டாடும் படமான 'புன்னகை தேசம்' படத்திலும், விக்ரமன் இயக்கிய 'உன்னை நினைத்து' படத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் கிடைத்தது.

வசந்த் இயக்கிய 'ஏய் நீ ரொம்ப அழகா இருக்க' படம், ஸ்ரீகாந்துடன் 'ஏப்ரல் மாதத்தில் 'என்னும் கல்லூரி நட்பையும், காதலையும் மையமாகக் கொண்ட வெற்றிப் படத்தில் நடித்தார்.

ஒவ்வொரு பூக்களுமே
2003இல் விஜய்யுடன் அவர் நடித்த 'வசீகரா', அடுத்த சில மாதங்களில் வெளியான 'பார்த்திபன் கனவு' சினேகாவின் பெயர்ச் சொல்லும் படமாக அமைந்தது. 'ஆட்டோகிராஃப்' படத்தில் இவர் பாடுவதுபோல் அமைந்த 'ஒவ்வொரு பூக்களுமே' மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதோடு அவ்வாண்டின் சிறந்த பாடலுக்கான தேசிய விருதை வென்றது. 'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' படத்தில் கமல் ஹாசனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
தொடர்ந்து அஜித்துடன் 'ஜனா', ஸ்ரீகாந்துடன் 'போஸ்', பிரசாந்துடன் 'ஆயுதம்', அர்ஜுனுடன் 'சின்னா', ஜீவனுடன் 'நான் அவனில்லை', ஷாமுடன் 'இன்பா', லாரன்ஸுடன் 'பாண்டி', சிலம்பரசனுடன் 'சிலம்பாட்டம்' போன்ற மாஸ் நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்தார்.
புன்னகை அரசி
திருமணம், மகப்பேறு ஆகியவை காரணமாகச் சினேகா நடிக்கும் படங்களின் எண்ணிக்கை குறைந்தாலும் மதிப்பு குறையாத நடிகையாகவே அவருடைய திரைப்பயணம் தொடர்கிறது.

இன்று தனது 40ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் அவருக்குத் திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர். #HBD சினேகா
இதையும் படிங்க : டாக்டர் படத்தில் தோனியை கொண்டாடிய ரசிகர்கள்