தேசிய விருதுபெற்ற மறைந்த ஓவியர் வீரசந்தானம், முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் 'ஞானச்செருக்கு'. இந்தப்படத்தை இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கியுள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் இயக்குநர்கள் எஸ் பி முத்துராமன் கௌதமன் சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய திருமாவளவன், ஞானச் செருக்கு திரைப்படத்தை எளிய தமிழில் அறிவு திமிர் என அழைக்கலாம். இந்த படத்தில், காதல், குத்துப்பாட்டு என எந்த வணிக நோக்கமும் இல்லை. உச்சத்தில் இருக்கும் நடிகனால் காலப்போக்கில் அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு ஏற்ற சுவையில் நடிப்பு தர முடியாது. இது தலைமுறை இடைவெளி என்பர்.
இளைய ராஜாவை 25 வருடங்கள் உலகமே கொண்டாடியது. பின்னர் ரகுமானை தூக்கி கொண்டாடியது. இளையராஜாவால் இந்த தலைமுறைக்கு ஏற்ற இசையை அமைக்க முடியாதா என்ற கேள்விக்கு பதில் அளிக்க முடியாது. இதை தான் தலைமுறை இடைவெளி என்பர். தலைமுறை இடைவெளியில் பாதிக்கப்படும் இயக்குனர் வெற்றி பெறுவதாக தற்போதைய அரசியலை இணைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
கலரும் இல்லை எம்ஜிஆர் மாதிரியும் இல்லை எப்படி ரஜினி படம் ஓடுகிறது என்று கேட்டார்கள். இதையெல்லாம் தாண்டி தான் ரஜினியும், விஜயகாந்தும் வெற்றி பெற்றனர். கலை படைப்புக்கு எந்த சுவையும் இல்லை என்றார்.
இயக்குநர் கெளதமன் பேசுகையில், ஓவியர் வீர சந்தானத்தின் இழப்பு தமிழ் சமுதாயத்தின் மிகப்பெரிய இழப்பு. சமூகத்திற்காக போராடியவர்களின் வாழ்க்கை வரலாற்றை அரசே பதிவு செய்ய வேண்டும் அப்படி செய்யாதது மிகப்பெரிய சோகம். ஒரு சமுதாயத்தின் அறிவை திருடுவது பெரிய அபத்தம் என்றார்.
இயக்குநர் எஸ்.பி முத்துராமன் பேசுகையில், இத்தனை காலம், ஆண்டு அனுபவித்ததினால் போதும் என ஒதுங்கி இருந்தோம். இப்பொழுது இந்த படத்தை பார்க்கும் பொழுது மீண்டும் ஒரு உத்வேகம் பிறக்கிறது. படம் எடுக்கும் எண்ணம் வருகிறது. இன்றைய இளைஞர்களுடன் போட்டி போட்டு படம் எடுக்க வேண்டும் என்ற ஆவல் பிறக்கிறது. விரைவில் நானும் படம் இயக்குவதில் கவனம் செலுத்த உள்ளேன் என்றார்.
இதையும் வாசிங்க: 'தி பேமிலி மேன் 2' - உற்சாக வெள்ளத்தில் 'சமந்தா'