உலகம் முழுவதும் 2000ஆம் ஆண்டு வெளியாகி 460 அமெரிக்க டாலர்களை ஈட்டி, சிறந்த திரைப்படம், சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுகளை அள்ளி, இன்றளவும் கிளாசிக்காக கொண்டாடப்படும் வரலாற்று ஆக்ஷன் திரைப்படம் ’கிளாடியேட்டர்’. பிரபல நடிகர் ரஸ்ஸல் க்ரோவ் (Russell Crowe) இப்பட்டத்தில் கிளாடியேட்டராக நடித்திருந்தார்.
’எ பியூட்டிஃபுல் மைண்ட்’, ’த இன்ஸைடர்’, ’சிண்ட்ரல்லா மேன்’ உள்ளிட்ட ஹாலிவுட்டின் பிற கவனிக்கத்த திரைப்படங்களின் மூலமும் தனது ஒப்பற்ற நடிப்புத் திறமையை நிரூபித்த ரஸ்ஸல் க்ரோவ், உலகம் முழுவதுமுள்ள சினிமா ரசிகர்களின் ஆதர்ச நடிகர்களில் ஒருவராக இன்றளவும் விளங்குகிறார்.
இந்நிலையில், அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றின் பிரபல கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரஸ்ஸல் க்ரோவ், முதன்முதலில் தன்னிடம் கூறப்பட்ட க்ளாடியேட்டர் திரைப்படத்தின் கதை மிகவும் மோசமானதாக இருந்ததாகவும், க்ளாடியேட்டரில் நடித்தது ஒரு தனித்துவமான அனுபவம் என்றும் தெரிவித்துள்ளார்.
”நீங்கள் ரோமைச் சேர்ந்த ஒரு படை வீரன், கி.பி. 180ஆம் ஆண்டில் நடப்பது போன்று வடிவமைக்கப்பட்ட கதை இது. உங்களை ரைட்லி ஸ்காட் இயக்குவார்” என்று மட்டுமே தன்னிடம் சொல்லப்பட்டதாகவும் அவர் அந்நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
மேலும், படத்தில் நடிக்கத் தொடங்கிய ஆரம்ப நாட்களில் படத்தின் மேல் அதிக நம்பிக்கை கொண்டிராத க்ரோவ், படம் நிறைவடையும் தறுவாயில் தாங்கள் சிறப்பான ஒரு விஷயத்தை செய்து முடித்ததை உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். அத்திரைப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களின் ஒட்டுமொத்த ஆற்றலும் அற்புதமான ஒன்று என்றும் தெரிவித்துள்ளார்.
கிளாடியேட்டர் திரைப்படத்தில் ராணுவத் தளபதியாக இருந்து க்ளாடியேட்டராக மாற நிபந்திக்கப்படும் ’மேக்ஸிமஸ்’ எனும் நபராக ரஸ்ஸல் க்ரோவ் தோன்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சுஷாந்த் சிங் மரணம் குறித்து சிபிஐ விசாரணை: சக நடிகர், நடிகைகள் கோரிக்கை