இஸ்ரேல் - பாலஸ்தீன் இடையே நீண்ட காலமாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. புனித ரமலான் மாதத்தை ஒட்டி இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் உள்ள புனிதத்தலத்தில் வழிபட பாலஸ்தீனியர்கள் குழுமியிருந்தபோது, இஸ்ரேல் காவல் துறைக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் மோதல் வெடித்தது.
அதைத் தொடர்ந்து இரு நாட்டு எல்லையான காசாவில் இரு நாள்களாக கடும் மோதல் நிலவி வருகிறது. இரண்டு தரப்பும் மாறிமாறி வான்வெளித் தாக்குதல் நடத்தி வருவதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலில் சிக்கி கேராளவைச் சேர்ந்த ஒரு பெண்ணும் பலியாகியுள்ளார்.
இந்தத் தாக்குதலுக்கு உலகின் பல்வேறு நாடுகள் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் பிரபலங்கள் பலரும் இந்த தாக்குதலுக்கு எதிராக தங்களது கருத்துகளை சமூக வலைதளப்பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், 'வொண்டர் வுமன்' படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான நடிகை கால் கேடட் இஸ்ரேல் - பாலஸ்தீன தாக்குதல் குறித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில், "என் இதயம் நொறுங்குகிறது. என் தேசம் போரைச் சந்தித்துள்ளது. என்னுடைய குடும்பத்தினர், நண்பர்கள், என்னுடைய மக்களுக்காக வருந்துகிறேன். இது நீண்ட காலமாக நிலவிவரும் தீய சுழற்சி. இஸ்ரேல் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழத் தகுதியுடைய நாடு. எங்களுடைய அண்டை நாடும் அதற்காக தகுதி உடையதே.
இப்போரில் பலியானவர்கள், அவர்கள் குடும்பத்தினருக்காகப் பிரார்த்திகிறேன். கற்பனைகூட செய்து பார்க்க முடியாத இந்த பகைமை விரைவில் முடிவுக்கு வர பிரார்த்திக்கிறேன். இருதரப்பு மக்களும் அமைதியாக வாழ எங்களுடைய தலைவர்கள் தீர்வு காண வேண்டும். சிறந்த நாள்களுக்காக பிரார்த்திக்கிறேன்" எனப் பதிவிட்டிருந்தார்.
கால் கேடட்டின் இந்த கருத்திற்கு நெட்டிசன்கள் சிலர் அவரது கருத்து இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கிறது எனக் கூறி கடுமையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்தனர். இதனால் கால் கேடட் தனது பதிவுக்கு கீழே கருத்து தெரிவிக்கும் வசதியை முடக்கியுள்ளார். நடிகை கால் கேடட் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.