சீயான் விக்ரம் நடிப்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் 'கோப்ரா'. இதில் ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்றுவந்த நிலையில், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்பைப் பாதியுடன் நிறுத்தியுள்ளது படக்குழு. படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். செவன் கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார்.
இப்படத்தில் விக்ரம் ஏழு விதமான கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு 75 விழுக்காடு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், இந்தப் படம் குறித்த புதிய தகவல்களை செவன் கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அதில், ’தும்பி துள்ளல்’ என்ற முதல் பாடல் ஜூன் 29ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் பட போஸ்டர் ஒன்றையும் பதிவிடப்பட்டுள்ளது. போஸ்டரில், விக்ரம் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டியின் கார்டூன் படங்களோடு பாடல் வெளியீட்டின் அழைப்பிதழ்களையும் வெளியிட்டுள்ளனர்.