சென்னை: 2008ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விஷாலின் சகோதரர் விக்ரம் கிருஷ்ணா தயாரித்த படம் ஒன்றிற்காக பைனான்சியர் விஜய் கோத்தாரி என்பவரிடம் விஷால் 50 லட்ச ரூபாய் கடனாக வாங்கியிருந்தார்.
ஆறு ஆண்டுகள் கழித்து அதாவது 2015ஆம் ஆண்டு பணத்தை திரும்பத் தருவதாக உத்தரவாதம் அளித்திருந்தார். ஆனால் பணத்தை தராமல் 2018ஆம் ஆண்டு சண்டக்கோழி 2 பட வெளியீட்டின் போது பணத்தை எடுத்து கொள்ளுமாறு கூறி 50 லட்ச ரூபாய்க்கான காசோலையை பைனான்சியரிடம் விஷால் கொடுத்துள்ளார்.
அதன் பின்னரும் விஷால் பணத்தை தராமல் தொடர்ந்து இழுத்தடித்த நிலையில், பைனான்சியர் விஜய் கோத்தாரி சார்பில் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், 50 லட்ச ரூபாயை 9 விழுக்காடு வட்டியுடன் பைனான்சியருக்கு செலுத்துமாறு கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விஷாலுக்கு உத்தரவிட்டது.
நீதிமன்றம் உத்தரவிட்டு ஒரு வருடம் ஆகியும் விஷால் பணத்தை திருப்பி செலுத்தாத நிலையில், தற்போது விஷால் நடிப்பில் உருவாகியுள்ள சக்ரா படம் வெளியாகவுள்ளது. இதனால் பைனான்சியர் விஜய் கோத்தாரி சார்பில் அவரது வழக்கறிஞர் மூலம் நடிகர் விஷால் மற்றும் ஓடிடி தளங்களான பி4U டெலிவிஷன் நெட்வொர்க் லிமிடெட், டிஸ்னி ஹாட் ஸ்டார், நெட்ப்ளிக்ஸ்,Zee 5, அமேசான் ஆகிய நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த நோட்டீஸில், படத்தை ஒடிடி தளங்களில் வெளியிடும் முன் விஷால் தங்களுக்கு தர வேண்டிய பணத்தை கொடுத்துவிட்டு மீதமுள்ள பணத்தை விஷாலுக்கு வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விஷாலின் 'சக்ரா' ஓடிடி-இல் வெளியாக பெருந்தொகை உத்தரவாதமாக நிபந்தனை!