தமிழ் சினிமாவில் சின்ன கலைவானர் என்று அழைப்பட்ட நகைச்சுவை நடிகர் விவேக் மறைவையொட்டி தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், “தமிழ் சினிமாவில் நகைச்சுவையோடு சமூக சீர்திருத்த கருத்துக்களையும் எடுத்துச்சொல்லி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியதால் சின்னக் கலைவாணர் என அன்போடு அழைக்கப்பட்டவர்.
அதோடு மட்டுமல்லாமல் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு அவருடைய கனவை நிறைவேற்றும் வகையில் கிரீன் கலாம் அமைப்பு மூலம் 1 கோடி மரக்கன்றுகளை நடுவதை இலக்காக வைத்துச் செயல்பட்டு, பள்ளிகள், கல்லூரிகள், கிராமங்கள், சாலையோரங்களில் என பல்வேறு இடங்களிலும் இதுவரை 33 லட்சத்து 23 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு இருக்கிறார்.
சிறந்த சமூக செயல்பாட்டாளராகவும், மனிதநேயராகவும் செயல்பட்டு வந்த நடிகர் விவேக்கின் மரணம் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவர் மறைந்தாலும் அவர் நட்டு வைத்த லட்சக்கணக்கான மரங்களின் மூலம் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ’என் நெருங்கிய நண்பர் விவேக்கின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது’ - ரஜினி