தென்னிந்தியாவின் முதல் மக்கள் தொடர்பாளர் ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் குறித்து பல்வேறு பிரமுகர்களின் அனுபவ நினைவுகளைக் கொண்டு பத்திரிகையாளர் அருள்செல்வன் தொகுத்துள்ள 'ஞாபகம் வருதே' நினைவலைகள் நூல் வெளியீட்டு விழா நடிகர் சிவக்குமாரின் இல்லத்தில் நடைபெற்றது.
அப்போது அவர் பேசுகையில், “எனக்கு ஃபிலிம் நியூஸ் ஆனந்தனைப் பல ஆண்டுகளாகத் தெரியும். அவருடன் நீண்டகால நட்பு இருந்தாலும் இந்தப் புத்தகத்தில் எனக்குத் தெரியாத பல தகவல்கள் இருக்கின்றன. குறிப்பாக ஆனந்தனின் இளமைக் காலம் பற்றிய தகவல்கள் எனக்கு ஆச்சரியமாகவும், புதியதாகவும் இருந்தன. அவருடைய தாத்தா பேராசிரியராக இருந்தவர், அவரது அப்பா பாலச்சந்தருக்கே மேலதிகாரியாக இருந்தவர்.
அப்படி ஒரு வளமான குடும்பத்தில் பிறந்தவர்தான் ஆனந்தன். அவரது முன்னோர்கள் சேர்த்துவைத்த வசதியால்தான் அவரால் இவ்வளவு தூரம் சேவை செய்ய முடிந்தது. அவருடைய சேவைக்கு பக்கபலமாக குடும்பமும் இருந்திருக்கிறது. அவருடைய பணிகளுக்கு முகம் சுழிக்கக் கூடிய ஒரு மனைவியாக இருந்திருந்தால் அவரால் இந்தச் சேவைகளையும் சாதனைகளையும் செய்திருக்க முடியாது. குடும்பத்தின் ஆதரவு இல்லாமல் எந்த சாதனையாளர்களும் சாதிக்க முடியாது. இதுவே அவரது வாழ்க்கை சொல்லும் பாடம்.
ஃபிலிம்நியூஸ் ஆனந்தன் எவரிடமும் குரல் உயர்த்திப் பேசி வாக்குவாதம் செய்ததை நான் பார்த்ததில்லை. கடைசிவரை சாந்த சொரூபியாகவே வாழ்ந்தவர். அப்படிப்பட்ட அவரைப் பற்றி வந்திருக்கும் ‘ஞாபகம் வருதே’ என்கிற இந்த நூல் அவரைப் பற்றி அறியாத தகவல்களையும் அனுபவங்களையும் கொடுக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.