'நாடோடிகள்', 'ஈட்டி', 'மிருதன்' போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த குளோபல் இன்போடெய்ன்மென்ட் நிறுவனம்தனது பத்தாவது படைப்பாக 'கீ'படத்தைதயாரித்துள்ளது.
ஜீவா,நிக்கி கல்ராணி, அனைகா சோட்டி, ஆர்.ஜே.பாலாஜி, சுஹாசினி ஆகியோர் நடித்துள்ள இந்த படத்திற்குக் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் காலீஸ். 'கீ'படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் உள்ள பிரசாத் லேப் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதில் நடிகர் ஜீவா, நிக்கி கல்ராணி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசியஜீவா, "வருடத்திற்கு ஒரு படம் நடித்துக் கொண்டிருந்தேன். ஆனால் நிக்கி கல்ராணியை பார்த்துதான் பல படங்கள் பண்ண வேண்டும் என எண்ணம் மனதில் தோன்றியது. நிக்கி கல்ராணியுடன் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை மலையாள நடிகர் கோவிந்த் பத்மசூரியா நடித்துள்ளார். மிகவும் சிறப்பாக நடித்துள்ளார்.
தற்போதைய தொழில்நுட்பத்தில் வளர்ந்துவரும் பிரச்னையை கூறும் படமாக இது அமைந்துள்ளது. காலீஸ் சிறந்த இயக்குநர். இதுபோன்ற நிறைய இளைய, புதுமுக இயக்குநர்கள் நம் தமிழ் சினிமாவிற்கு தேவை. இளைய இயக்குநர்கள் வந்தால்தான் புதிய எண்ணங்கள் தோன்றும்.
புதிய எண்ணங்கள் இருந்ததால்தான் பல பரிமாணங்களில் திரைப்படங்களைத்தர முடியும். படத்தின் காட்சிகள் மிகப் பிரமாண்டமாக வந்துள்ளன. இந்தப்படம் ஏப்ரல் 12ஆம் தேதி ரிலீசாக உள்ளது"என்றார்.
பின்னர் நடிகை நிக்கி கல்ராணி பேசும்போது, "மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்தப்படம் வருகிறது என்றே சொல்லலாம். நான்கைந்து வருடங்களாக இந்தப் படத்தை ஒரு குழந்தைபோல் பாதுகாத்து வந்துள்ளனர். ஜீவாவுடன் இதுதான் என்னுடைய முதல் படம். ஆனால் 'கலகலப்பு 2' படம் முதலில் ரிலீஸானது"என்றார்.
இயக்குநர் காலீஸ் பேசும்போது, "செல்போன்கள் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் இது. ஒரு நான்கு வயது குழந்தை ஸ்மார்ட்போன் வைத்திருந்தால் அந்த குழந்தை இந்த படம் பார்க்க வேண்டும். ஒரு 70 வயது முதியவர் செல்போன் பயன்படுத்தினால் அவரும் இந்தப்படத்தைப் பார்க்க வேண்டும். நாம் செய்யும் லைக்குகள், நாம் செய்யும் பகிர்வுகள் இவற்றால் நடக்கும் பின்னணி என்ன ? என்பதை எடுத்துக்கூறும் படம்" என தெரிவித்தார்.