நவீன சினிமாவின் திரைச்சிற்பியாக திகழ்ந்த இயக்குநர் மகேந்திரன்(79) உடல் நலக்குறைவால் இன்று காலை அவரது இல்லத்தில் மரணமடைந்தார். புதுமை இயக்குநர்களின் கனவு நாயகனாகவும் இருந்துள்ளார். இந்நிலையில் அவரது உடலுக்கு சினிமா பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பள்ளிக்கரணையில் இருக்கும் அவரது இல்லத்தில் மக்களின் பார்வைக்கு இயக்குநர் மகேந்திரனின் பூத உடல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், கவிஞர் வைரமுத்து மகேந்திரன் மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இதில் அவர் கூறியதாவது; 'தமிழ் சினிமாவுக்கு இந்திய உயரம் தந்தவர் இயக்குநர் மகேந்திரன். வலிகளுக்கு மத்தியில் உள்ள சுகம்தான் வாழ்க்கை என்பது மகேந்திரனின் படைப்புகளில் உள்ள கலைச் செய்தி. மகேந்திரனை இழந்து தவிக்கும் குடும்பத்தார், கலையன்பர்களுக்கு இரங்கல் சொல்லிக்கொண்டு எனக்கு நானே ஆறுதல் கூறிக்கொள்கிறேன்' என வைரமுத்து கூறினார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகேந்திரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 'தமிழ் இயக்குநர்களில் கதாநாயகராக விளங்கிய மகேந்திரனின் மறைவு செய்தி அறிந்து துயரத்திற்குள்ளானேன். எளிமைக்கு இலக்கணமாக விளங்கிய மகேந்திரன் யதார்த்த சினிமா இயக்குநர் என்ற பெயரைப் பெற்றவர். ரஜினி நடித்த முள்ளும் மலரும் படம் இன்றைக்கும் அண்ணன், தங்கை பாசத்திற்கு அத்தாட்சியாகவும் திகழ்கிறது' என்று அவர் கூறினார்.