தமிழ் திரையுலகில் ஏற்கனவே தயாரிப்பாளர் சங்கம் உள்ளது. இருப்பினும், பல ஆண்டுகளாக திரைப்படம் தயாரிக்காதவர்களும் அதில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில், தமிழ் திரையுலகில் தற்போது படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் இணைந்து 'தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம்' என்ற சங்கத்தைத் தொடங்கியுள்ளனர்.
இதன் தலைவராக பாரதிராஜ செயல்பட்டுவருகிறார். இந்நிலையில், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், திரையரங்கு உரிமையாளர்களுக்கு கோரிக்கை கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அதில் குறிப்பிட்டுள்ள விஷயங்களில் உடன்படிக்கை ஏற்படாவிட்டால் புதிய படங்களை வெளியிட முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்படுவோம் என்று பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து பாரதிராஜா எழுதியுள்ள கடிதத்தில், "தயாரிப்பாளர்களாகிய நாங்கள் சிறிய தொகை முதல் 60, 70 கோடி வரை ஷேர் வரும் படங்களைத் தயாரித்து வெளியிட்டுவந்திருக்கின்றோம். இனிவரும் காலங்களில் இதுபோல் வருமா என்பது இயலாத காரியம்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் எங்களது படங்களைத் திரையரங்குகளில் திரையிடமுடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். தற்போது படம் எடுத்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்களும் படம் எடுக்கப் போகும் தயாரிப்பாளர்களும் கலந்து ஆலோசித்து கீழ்காணும் முடிவுகளை எடுத்து உங்களுக்கு எங்களது வேண்டுகோளாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எனவே தாங்கள் தங்கள் சங்க உறுப்பினர்களுடன் பேசி ஒரு நல்ல முடிவை அறிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
திரையரங்கு உரிமையாளர்களுக்கு வேண்டுகோள்
1. கடந்த 10 வருடங்களுக்கு மேலாக கூயூப்/யூஎஃப்ஓ-க்கான வி.பி.எஃப் கட்டணத்தைத் தயாரிப்பாளர்களாகிய நாங்கள் செலுத்திவந்துள்ளோம் இது புரொஜக்டர் முதலீட்டுக்கும் அதிகமான தொகை கொடுக்கப்பட்டுள்ளது. எனவே கூயூப்/யூஎஃப்ஓ-க்கான வி.பி.எஃப் கட்டணத்தை இனி திரைப்படத் தயாரிப்பாளர்களாகிய எங்களால் செலுத்த முடியாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
2. பல படங்களுக்குத் திரையரங்குகளில் முறையான திரைகள், காட்சிகள் கிடைக்காத நிலையில் திரையரங்கு ஷேர் விகிதங்கள் 50,40, 30 என்பது மிகவும் குறைவாக இருப்பதால், அவைகளை மாற்றிச் சரியாக முடிவுசெய்ய வேண்டும். அதே போல் தனியரங்குகளின் ஷேர் விகிதங்களை முறைப்படுத்தி, ஒவ்வொரு பட்ஜெட் படத்திற்கும் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை நிர்ணயித்து அறிவிக்க வேண்டும். சிட்டி, மல்டிபிளெக்ஸ், சிங்கிள்/தனி திரையரங்குகளுக்கு மாற்றி அமைக்க வேண்டும். இதை விரைவில் நாம் கூட்டாகப் பேசி திரையரங்குகள் மீண்டும் திறக்கும் முன்பு முடிவு செய்ய வேண்டும்
3. பல கோடி ரூபாய் செலவு செய்து படமெடுத்து அதற்கு ஒரு கோடி, இரண்டு கோடி என்று விளம்பரம் செய்து ரசிகர்களைத் திரையரங்குகளுக்கு வரவைத்து படம்பார்க்க வைக்கும் தயாரிப்பாளர்களுக்குத் திரையரங்கில் காட்டப்படும் விளம்பர வருமானத்தில் எந்த பங்கும் இல்லை. அது டிஜிட்டல் கம்பெனிகளுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் மட்டுமே சொந்தம் என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. எனவே திரையரங்குகளில் ஒளிபரப்பப்படும் விளம்பரங்களின் மூலம் கிடைக்கும் வருவாயில் கண்டிப்பாக அந்த நாளில் திரையிடப்படும் படங்களின் தயாரிப்பாளர்களுக்கு ஒரு பங்கு கொடுக்க வேண்டும்.
4. Book My Show/ Ticket News போன்ற ஆன்லைன் டிக்கெட் புக்கிங் மூலம் வரும் தொகையில் தயாரிப்பாளர்களுக்கு ஒரு பகுதி தரப்பட வேண்டும்.
5, ஹோல்டு ஓவர் முறையை எந்தத் திரையரங்கும் பின்பற்றுவதில்லை. நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் படங்களை திடீரென்று நிறுத்துவதும், நல்ல தரமான படங்களை Pickup ஆவதற்கு வாய்ப்பளிக்காமல் மறுக்கப்படுவதும் மிகவும் வேதனைக்குரிய ஒன்று. எனவே ஹோல்டு ஓவர் முறை புதிய பட வெளியீடுகளுக்கு ஒவ்வொரு வாரமும் பின்பற்றப் பட வேண்டும். ஹோல்டு ஓவர் இருக்கும் படங்களைத் திரையரங்குகள் மாற்றக்கூடாது. ஹோல்டு ஓவர் சதவீதத்தை நாம் பேசி முடிவு செய்துகொள்ளலாம்.
6. திரையரங்குகளை நீங்கள் லீஸ் எடுத்து நடத்துவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் Confirmation என்ற பெயரில் பல திரையரங்குகள் சிலரால் எடுத்து நடத்தப்படும் பொழுது தயாரிப்பாளர்களுக்கான Second Run/ Deposit போன்ற பல வியாபார சுதந்திரங்கள் பறிபோகின்றன. எனவே மேற்கண்ட Confirmation செய்பவர்களால் நடத்தப்படும் எந்த திரையரங்குகளிலும் எங்களது படங்களைத் திரையிட இயலாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேற்கண்ட அனைத்தும் திரையுலகின் சிறந்த எதிர்காலம் கருதி தயாரிப்பாளர்களாகிய எங்களால் முடிவுசெய்யப்பட்டது. சகோதர சங்கமான திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் மேற்கண்ட கோரிக்கைகளைப் பரிசீலித்து சுமுகமாக நடத்தித் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கங்கனா ரணாவத்திற்கு Y பிளஸ் பாதுகாப்பு!