'ஒய் நாட்' ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. தனுஷின் 40ஆவது படமான இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஐஸ்வர்யா லக்ஷ்மி, கலையரசன், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு லண்டன், மதுரை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.
2020ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி திரைக்கு வரவிருந்த இப்படம், ஊரடங்கு காரணமாக தள்ளிப்போனது. இந்நிலையில், இப்படத்திலிருந்து வெளியான 'ரகிட ரகிட', 'புஜ்ஜி', 'நேத்து' உள்ளிட்ட பாடல்கள் சமூக வலைதளங்களிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றன.
படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்திருந்த நிலையில், ஜூன் 1ஆம் தேதி காலை படத்தின் ட்ரெய்லர் வெளியானது. அதில், புரோட்டா மாஸ்டர் சுருளி கதாபாத்திரத்தில் இப்படத்தில் வரும் தனுஷ், லோக்கல் டானாக இருந்து இன்டர்நேஷனல் டானாக மாறுவது போன்ற காட்சிகளும் அதிரடி வசனங்களும் இடம் பெற்றிருந்தன. இந்த ட்ரெய்லர் வெளியான சில மணி நேரங்களிலேயே சமூகவலைதளத்தில் வைரலானது. இப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூன் 18ஆம் தேதி வெளியாகிறது.
தற்போது 'ஜகமே தந்திரம்' 190 நாடுகளில் 17 மொழிகளில் வெளியாகவுள்ளது. அதன் படி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், இத்தாலியன், பொலீஷ், போர்ச்சுகீஷ், பிரேசிலியன், ஸ்பெனீஷ் - ஜேஸ்டிலியன், ஸ்பெனீஸ் - நியூட்ரல், தாய், இந்தோனேஷியன், வியட்நாமீஷ் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. தமிழில் ஒரே சமயத்தில் இவ்வளவு மொழிகளில் வெளியாகும் முதல் படம் 'ஜகமே தந்திரம்' என கூறப்படுகிறது.