டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர் 'குப்பத்து ராஜா' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ், பாலக் லால்வானி, பார்த்திபன், யோகி பாபு மற்றும் பூனம் பஜ்வா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை எஸ் ஃபோகஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
'குப்பத்து ராஜா' படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதனைப் பார்த்த பலரும், படம் லோக்கலாக இருக்கிறது என கருத்து தெரிவித்தனர்.
இதுகுறித்து பாபா பாஸ்கர் கூறியதாவது, “உண்மையில் நான் 'லோக்கல்' என்ற வார்த்தையை ஏற்றுக் கொள்ளவில்லை, மாறாக அதை 'நேட்டிவிட்டி' என்று தான் அழைப்பேன்.
நம்மை சுற்றியுள்ள மக்கள் கிராமங்கள் மற்றும் அண்டை மாநிலங்களின் நேட்டிவிட்டியை பார்த்து வியக்கிறார்கள். சேரிகள் என்பவை உண்மையில் சென்னை மாநகரத்தின் ஒரு கூறுகள் தான். குப்பத்து ராஜா படத்தின் ட்ரெய்லர் யூடியூபில் லட்சக்கணக்கான ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டு, மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியிருக்கிறது.
இந்த படம் ஒரு தனித்துவமான கதையை கொண்டுள்ளது. 'குப்பத்து ராஜா' என்ற தலைப்புக்கு ஏற்றவாறு, ட்ரெய்லரில் வரும் சம்பவங்களை தொடர்புப்படுத்தி பார்த்தால், இது குப்பத்துக்கு 'ராஜா' ஆக விரும்பும் இருவருக்கு இடையில் நடக்கும் மோதல் என்ற பார்வையை அளித்துள்ளது.
ட்ரெய்லரில் நாம் பார்த்ததை விட ஆழமான கதை படத்தில் உள்ளது. கதையுடன் இணைந்து பொழுதுபோக்கு விஷயங்களும் இருக்கும். மேலும், வருகின்ற ஏப்ரல் 5ஆம் தேதி உலகெங்கிலும் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.