இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு மேலாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மகாராஷ்டிரா அரசு டிவி மற்றும் சினிமா படப்பிடிப்பு நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், பிரபல ஆங்கில நாளிதழுக்கு இதுகுறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் சஷி மிட்டல் பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, "அரசு அறிவுறுத்தியது அனைத்துமே எங்களுக்கு புதிதாக இருந்தது. படக்குழுவுக்கு படப்பிடிப்பு தொடங்குவதற்கு 10 நாள்களுக்கு முன்பே பயிற்சி கொடுத்தோம்.
குறைவான படக்குழுவினரை வைத்து மட்டுமே படப்பிடிப்பு நடத்த முடிவு செய்துள்ளோம். குழந்தைகள் மற்றும் 65 வயதுக்கு மேல் இருப்பவர்களை படப்பிடிப்பு தளத்திற்குள் அனுமதிக்க மாட்டோம்.
படக்குழுவினருக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பிறகுதான் படப்பிடிப்பில் கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்படும். தகுந்த இடைவெளி, மாஸ்க் அணிதல் போன்றவற்றை கட்டாயமாக பின்பற்ற அனைவரையும் அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.