சென்னை: கடந்த 2019ஆம் ஆண்டு தன் மீது 'மீ டூ' புகார் கூறிய லீனா மணிமேகலை மீது, இயக்குநர் சுசிகணேசன் சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மான நஷ்ட ஈடு வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கு விசாரணையை லீனா மணிமேகலை தொடர்ந்து காலதாமதப்படுத்தி வந்த நிலையில், வழக்கை நான்கு மாதத்திற்குள் விசாரித்து முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதற்கடுத்த நாள் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக லீனா மணிமேகலை ட்விட்டரில் பதிவிட்டார். இதனையடுத்து லீனா மணிமேகலை தவறான தகவல்களை பரப்புவதாகவும், உண்மையில் அவரது உயிருக்கு யாரால் ஆபத்து என்பதைக் கண்டறிந்து தனக்குப் பாதுகாப்பு வழங்குமாறும் சென்னை காவல் துறையில் சுசி கணேசன் புகாரளித்தார்.
மான நஷ்ட ஈடு வழக்கு
பின்னர் தனது அடுத்த தமிழ்ப் படமான "வஞ்சம் தீர்த்தாயடா" அறிவிப்பினையும் வெளியிட்டிருந்தார், சுசி கணேசன். இதனைத் தொடர்ந்து பாடகி சின்மயி தானாக முன்வந்து சுசி கணேசனுக்கு எதிராகவும், அவரது படம், படத்தில் பணியாற்றும் கலைஞர்கள் குறித்தும் அவதூறு கருத்துகளை ட்விட்டர் பக்கங்களில் பகிர்ந்திருந்தார்.
அதனை சில பத்திரிகைகளும் பிரசுரம் செய்தன. பாடகி சின்மயி தன்னோடு எந்த விதத்திலும் தொடர்பில்லாத நிலையில், தன் மீது அபாண்டமான பழிகளை சுமத்தி அவதூறு பரப்புவதாக சுசி கணேசன் புகார் தெரிவித்தார். அத்துடன் சின்மயிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் ரூ. 1 கோடியே 10 லட்சத்திற்கு மான நஷ்ட ஈடு வழக்கும் தொடர்ந்தார்.
சுசி கணேசன் மீது அவதூறு கருத்து பரப்பியவர்கள் குறித்த வழக்கு இன்று (ஜன. 20) நீதிபதி அப்துல்லா குத்தூஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது சுசி கணேசன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தொடர்ந்து சமூக வலைதளங்களில் சுசி கணேசன் குற்றவாளி என்பது போல தொடர்ந்து அவதூறு பரப்பப்படுகிறது என வாதிட்டார்.
நோட்டீஸ் அனுப்ப உத்தரவு
அத்துடன் அவரது தொழிலுக்கும், பெயருக்கும் லீனா மணிமேகலை, சின்மயி போன்றோர் ட்விட்டர், ஃபேஸ்புக் தளங்களைப் பயன்படுத்தி களங்கம் ஏற்படுத்துவதாகவும் முறையிட்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, லீனா மணிமேகலை, சின்மயி உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் பேச, அவதூறு கருத்துகளைப் பரப்ப தற்காலிகத் தடை விதித்து உத்தரவிட்டார்.
அத்துடன் இவர்களது பேட்டியை ஒளிபரப்பிய தனியார் யூ-ட்யூப் சேனலைச் சேர்ந்த தன்யா ராஜேந்திரனுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும் இவ்வழக்குத் தொடர்பாக இரு தரப்பும் பத்திரிகை, சமூக வலைதளங்களில் பேசத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த நடிகைக்கு கரோனா!