டிசி காமிக்ஸின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்று பேட்மேன். பேட்மேன் கதை உலக அளவில் பிரபலமாவதற்கு காரணமாக திகழ்பவர் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன். காமிக்ஸில் உள்ளது போல் மிகையான மேக்கப் போட்டு எடுக்கப்பட்டுக் கொண்டிருந்த பேட்மேன் சீரிஸ், கிறிஸ்டோபர் நோலனால் உயிர்பெற்றது.
ஒரு திரைப்படத்தின் வில்லன் கதாபாத்திரம் எந்த அளவுக்கு வலுவானதாக உருவாக்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு அத்திரைப்படத்தின் வெற்றி அமையும் என திரைமேதை ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் கூறியிருப்பார். கிறிஸ்டோபர் நோலன் தனது திரைப்படங்களில் வரும் வில்லன் கதாபாத்திர உருவாக்கத்தில் மிகவும் கவனம் செலுத்தக் கூடியவர். இதுவரை 10 திரைப்படங்களை இயக்கியுள்ள கிறிஸ்டோபர் நோலனை புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றது பேட்மேன் சீரிஸ்.
கிறிஸ்டோபர் நோலன் திரைப்பயணத்தில் மாபெரும் வெற்றிபெற்ற முதல் திரைப்படம் ‘பேட்மேன் பிகின்ஸ்’. 2005ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் பேட்மேன் கதாபாத்திரத்துக்கு புத்துயிர் கொடுத்தது. வணிக ரீதியாக இந்தப் படம் மாபெரும் வெற்றியடைந்தது. இதன் இரண்டாம் பாகமான ‘தி டார்க் க்நைட்’ 2008ஆம் ஆண்டு வெளியானது. இதில் இடம்பெற்ற ‘ஜோக்கர்’, உலக அளவில் சினிமா ரசிகர்கள் பலரும் ரசிக்கும் வில்லன் கதாபாத்திரமாகும். இந்த கதாபாத்திரத்தில் நடித்த ஹீத் லெட்ஜர், சிறந்த குணச்சித்திர நடிகருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றார்.
அதேபோல் கிறிஸ்டோபர் நோலன் தன் திரைப்படத்தில் இடம்பெறும் வசனங்கள் மீதும் அதிக கவனம் செலுத்தக் கூடியவர். வசனங்கள் குறைவாக இருந்தாலும், மனதில் நிற்கும்படி இருக்கும்.
சைக்கோ கதாபாத்திரமான ஜோக்கர் பற்றி ஹீரோ பேட்மேன், குற்றவாளிகளில் என்ன வித்தியாசம் இருக்கப் போகிறது, அவர்கள் அனைவரும் ஒன்றுதான் என்பார். அதற்கு ஜோக்கர் பற்றி விளக்க ஆல்ஃப்ரெட் பென்னிவொர்த், நாங்கள் ஒருமுறை விலையுயர்ந்த ரூபி கற்களை தேடிச் சென்றோம். அதனை பேண்டிட்ஸ் (கொள்ளையர்கள்) திருடிச் சென்றுவிட்டார்கள். அதை எங்காவது விற்பனை செய்திருப்பார்களா என 6 மாதம் தேடினோம். ஆனால் அவர்கள் அதை எங்கும் விற்பனை செய்யவில்லை. சில காலம் சென்றபின் அந்த விலையுயர்ந்த ரூபி கற்களை வைத்து சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பேண்டிட்ஸ் அந்த விலையுயர்ந்த ரூபி கற்களை தூக்கி வீசிவிட்டார்கள் என்பார்.
அதற்கு பேட்மேன், அதை ஏன் அவர்கள் திருட வேண்டும் என கேட்பார்.
அது அவர்களுக்கு விளையாட்டு, சிலர்தான் தான் செய்யும் காரியங்களுக்கு லாஜிக் பார்ப்பார்கள். சிலர் இந்த உலகம் பற்றி எரிவதைப் பார்த்து ரசிப்பார்கள் என ஜோக்கர் கதாபாத்திரத்தை பற்றி ஆல்ஃப்ரட் விளக்கம் தருவார். இந்த ஒட்டுமொத்த உரையாடல்தான் ஜோக்கர் பற்றிய புரிதலை ஏற்படுத்தும். இப்படி அவசியமான உரையாடல்கள் மட்டுமே கிறிஸ்டோபர் படங்களில் இடம்பெறும், மற்றபடி காட்சிமொழியில் அவர் தனிரகமான இயக்குநர்.
பேட்மேன் சீரிஸில் ‘தி டார்க் க்நைட்’ படத்துக்குப் பிறகு வந்தது ‘தி டார்க் க்நைட் ரைசஸ்’. இந்த படத்திலும் வில்லன் கதாபாத்திரம் மிரட்டலாக அமைக்கப்பட்டிருக்கும். இந்த இரு படங்களிலும் வில்லனின் அறிமுகம்தான் முதல்காட்சியாக இருக்கும். வில்லனின் அறிமுக காட்சியே மொத்த படத்தையும் பார்ப்பதற்கான ஆர்வத்தை தூண்டும்.
ஜோக்கர் கதாபாத்திரம் எந்த அளவு ரசிகர்களை ஈர்த்ததோ, அதே அளவு கொடூர வில்லனான பேன் கதாபாத்திரமும் சினிமா ரசிகர்களை ஈர்த்தது. டாப் வில்லன்கள் பட்டியலில் என்றுமே ஜோக்கர் கதாபாத்திரத்துக்கு தனி இடம் உண்டு. தனக்கென ஒரு சினிமா பாணியை உருவாக்கி, அதன்மூலம் மாபெரும் ரசிகர் கூட்டத்தை தன்வசம் ஈர்த்த கிறிஸ்டோபர் நோலன் தனது 49ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவர் திரைப்பயணம் தொடர வாழ்த்துகள். அவரது அடுத்த படைப்பான ‘டெனண்ட்’ திரைப்படத்துக்காக சினிமா ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.