சென்னை: 'ஓ மை கடவுளே' படத்தின் இயக்குநர் மீது ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
காதலர் தினத்தை முன்னிட்டு கடந்த 14ஆம் தேதி வெளியான படம் 'ஓ மை கடவுளே'. அஷ்வத் மாரிமுத்து இயக்கியிருந்த இந்தப் படம் ரசிகர்களைக் கவர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இதையடுத்து இந்தப் படத்தில் நடிகை வாணி போஜன், நடிகருடன் தனது மொபைல் நம்பரை பரிமாறிக்கொள்ளும் காட்சி இடம் பெற்றுள்ளது. அவர் பரிமாறிக் கொண்ட அந்த மொபைல் எண்ணானது உண்மையில் சென்னை எம்.கே.பி நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் பூபாலன் என்பவருக்கு சொந்தமான நம்பர் ஆகும்.
படத்தில் வாணி போஜன் கூறியதாக சொல்லப்பட்ட அந்த நம்பரை குறித்துக் வைத்துக்கொண்டு சிலர், நடிகைக்கு ஃபோன் செய்வதாக நினைத்து தினந்தோறும் பூபாலனுக்கு ஃபோன் செய்து தொல்லை கொடுத்து வருகின்றனர். இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான அவர் சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் திரைப்பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து மீது இன்று புகார் அளித்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”கடந்த 19 ஆண்டுகளாக நான் இந்த மொபைல் நம்பரை பயன்படுத்திவருகிறேன். பல லட்சம் ரூபாய் செலவு செய்து படம் எடுக்கும் அவர்கள் தனியாக ஒரு மொபைல் நம்பரை வாங்கி அதை பயன்படுத்தாமல் வேறு ஒருவருடைய நம்பரை பயன்படுத்துவது மிகப்பெரிய தவறு.
ஒரு நாளைக்கு சுமார் ஐம்பதிலிருந்து நூறு கால்களுக்கு மேல் வருகிறது. அப்படி பேசுபவர்கள் நடிகை வாணி போஜனிடம் தன்னை பேச வைக்க வேண்டுமென கூறுகின்றனர்.
என்னையும், எனது குடும்பத்தினரையும் அசிங்கமாக திட்டுகின்றனர். அதுமட்டுமல்லாமல் பலர் வாட்ஸ்அப்பில் தவறாக மெசேஜ் செய்கின்றனர். இயக்குநர் செய்த தவறினால் தற்போது நானும் எனது குடும்பமும் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறோம். எனவே உடனடியாக படத்தில் இடம்பெறும் இந்தக் குறிப்பிட்ட காட்சியை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், அலட்சியமாக செயல்பட்ட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.
முன்னதாக, இந்தப் படம் உரிய அனுமதியின்றி கேபிள் டிவியில் திரையிடப்பட்டதாக படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து தற்போது அந்த இயக்குநர் மீதே மற்றொரு தொழிலதிபர் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: கேபிள் டிவியில் அனுமதியின்றி ஒளிபரப்பான 'ஓ மை கடவுளே' - இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து புகார்