இயக்குநர் ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'அவதார்'. மிகவும் பிரமாண்டமாக வெளியான இத்திரைப்படம் வசூல் சாதனை செய்தது.
இதையடுத்து 'அவதார்' படம் நான்கு பாகங்களாக வெளியாகும் என்று படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேம்ரூன் 2016ஆம் ஆண்டு அறிவித்தார். பிறகு அவதார் படத்தின் 2ஆம் பாகம் டிசம்பர் 18ஆம் தேதி 2020ஆம் ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் ஷூட்டிங் தாமதமானதால் அவதார் 2 படம் டிசம்பர் 17ஆம் தேதி, 2021ல் வெளியிடப்படும் என்று புதிய அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனமான டிஸ்னி அறிவித்தது.
இந்நிலையில் தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு பின் தங்கியுள்ளதால் மீண்டும் அவதார் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போயுள்ளது.
இதுகுறித்து படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கரோனா வைரஸ் பரவல் காரணமாக படப்பிடிப்பை குறித்த நேரத்தில் முடிக்க முடியவில்லை. நியூசிலாந்தில் படப்பிடிப்பை நடத்தி வந்தோம். கரோனாவுக்கு முன்பு 2021ஆம் ஆண்டு படத்தை வெளியிடத் தயாராக இருந்தோம். ஆனால் தற்போதைய சூழலால் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு முழு ஒத்துழைப்பு தரும் டிஸ்னி நிறுவனத்திற்கு மிக்க நன்றி.
மேலும் அவதார் 2 படம், டிசம்பர் 16, 2022 ஆம் ஆண்டு வெளியாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.