கமல்ஹாசன் 2017ஆம் ஆண்டு 'தலைவன் இருக்கின்றான்' படத்தின் தலைப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். பின் ’மக்கள் நீதி மய்யம்’ கட்சியைத் தொடங்கி அரசியலில் நுழைந்ததால், படம் இயக்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக அவதாரம் எடுத்தார்.
தொடர்ந்து 'விஸ்பரூபம் - 2' படத்தை இயக்கினார். அதனைத் தொடர்ந்து பிஸியான கமல், தற்போது 'இந்தியன் - 2' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
’இந்தியன் - 2’ ஐத் தொடர்ந்து தற்போது ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் கமல் கவனம் செலுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இப்படம் 1992இல் வெளியான 'தேவர் மகன்' படத்தின் தொடர்ச்சியாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாக கமல்ஹாசன் சமீபத்தில் அறிவித்த நிலையில், ஆண்ட்ரியா, பூஜா குமார், நடிகர் விஜய் சேதுபதி, வடிவேலு ஆகியோர் முக்கிய வேடத்தில் படத்தில் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கவுள்ளதாக பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், ஜூன் 11ஆம் தேதி மாலை ஐந்து மணிக்கு கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் இணைந்து சமூக வலைதளங்களில் 'தலைவன் இருக்கின்றான்' படம் குறித்து பேசவுள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
![கமல் - ஏ.ஆர். ரகுமான் சந்திப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/02:57_tn-che-03-kamal-thalaivanirukintran-script-7204954_09062020143926_0906f_1591693766_336.jpg)
இந்த உரையாடலில் 'தலைவன் இருக்கின்றான்' படம் குறித்த முக்கியத் தகவல்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.