சென்னை: சிறு வயதில் பாலியல் ரீதியாக துன்புறுத்தலை அனுபவித்தேன் என்று ட்விட்டரில் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் அர்ஜுன் ரெட்டி பட நடிகர் ராகுல் ராமகிருஷ்ணா.
தெலுங்கில் 2017ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்தவர் ராகுல் ராமகிருஷ்ணா. படத்தின் ஹீரோ விஜய் தேவரகொண்டாவின் நண்பராகத் தோன்றி காமெடி காட்சிகளில் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தார்.
தற்போது இவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக தனது ட்விட்டரில் அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது, “குழந்தைப் பருவத்தில் பாலியல் ரீதியாக துன்புறுத்தலை அனுபவித்தேன். அந்தத் துயரச் சம்பவத்தைப் பற்றி என்ன சொல்வதென்று தெரியவில்லை. வலியை ஏற்படுத்திய அந்தச் சம்பவம்தான் என்னைப் பற்றி தெரிந்துகொள்ள காரணமாக இருந்தது.
குற்றம் செய்பவர்களோடு நான் வாழ்ந்திருப்பது தெரியவந்தது. இதுபோன்ற சம்பவங்களுக்கு ஒருபோதும் நீதி கிடைப்பதில்லை. தற்காலிகமான நிவாரணம் மட்டுமே கிடைக்கிறது. உங்கள் குழந்தைகளைத் தைரியமுள்ளவராகவும் சமூகக் கோட்பாடுகளை உடைத்தெறியும் சிறந்த மனிதராகவும் வளர்த்தெடுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அடுத்தடுத்த பதிவுகளாக இதை ராகுல் பதிவிட்டிருந்த நிலையில், இதைப் பார்த்த ரசிகர்கள் பலர் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து மற்றொரு பதிவில், ”அன்பான வார்த்தைகளால் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றிகள். உங்கள் குழந்தைகளை நெருக்கமாக கவனித்து, பாதுகாப்பதுடன் அவர்களின் செயல்பாடுகளில் மாற்றம் உள்ளதா என்பதையும் பார்த்துக்கொள்ளுங்கள். இதுபோன்ற கொடூரர்களிடமிருந்து தற்காத்துக்கொள்ள அவர்களுக்குப் போதிய திறன்கள் இருக்கிறதா என்பது பற்றியும் உறுதிசெய்துகொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.