இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’தளபதி’ படத்தில் ரஜினியின் தம்பியாக நடித்ததன் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் அரவிந்த் சாமி. அதன்பிறகு ’ரோஜா’ படத்தில் இவரை கதாநாயகனாக அறிமுகம் செய்தார் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது முதல் படம், இந்தக் கூட்டணி வெற்றிபெறுமா என்று மணிரத்னத்தை கிண்டல் அடித்தவர்களும் உண்டு. ஆனால், படமும் பாடலும் மாபெரும் வெற்றிபெற்றது.
![அரவிந்த் சாமி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3590311_roja.jpg)
எந்தப் பக்கம் பார்த்தாலும் ரசிகர்கள் வெள்ளை மழையில் நனைந்து கொண்டிருந்தனர். தமிழ் சினிமா அரவிந்த் சாமியை சாக்லேட் பாய் என்று வருணிக்க ஆரம்பித்தது. தமிழ் சினிமாவில் நவரச நாயகன் கார்த்தி-க்கு பிறகு பலரையும் கவர்ந்த ஆணழகன் ஆனார் அரவிந்த் சாமி. ’ரோஜா’ படத்தை பார்த்த பெண் ரசிகைகள் அரவிந்த் சாமிக்காக பக்கம் பக்கமாய் காதல் கடிதம் எழுதியிருக்கிறார்கள். இதையடுத்து மணிரத்னம் இயக்கிய ‘பம்பாய்’ படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
![அரவிந்த் சாமி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3590311_aravind.jpg)
’இந்திரா’, ‘தாலாட்டு கேட்குதம்மா’ என பல படங்களில் நடித்தார். நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்த அரவிந்த் சாமி திடீரென நடிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டு சொந்தமாக தொழில் தொடங்கி வெற்றிக்கொடி நாட்டினார். அவர் சினிமாவை விட்டு விலகியிருந்தாலும் அவரது பெண் ரசிகைகள் அவரின் அழகையும், நடிப்பையும் பாராட்டாமல் இல்லை. சினிமா பக்கம் தலைகாட்ட மறுத்த அரவிந்த் சாமியை மீண்டும் ‘கடல்’ படத்தின் மூலம் அழைத்து வந்ததும் மணிரத்னம்தான். தன்னை சினிமாவுக்கு அறிமுகம் செய்துவைத்த குருவின் பேச்சை தட்டாத செல்லப்பிள்ளையாக அரவிந்த் சாமி இருந்தார். இன்றுவரை அப்படியே இருக்கிறார்.
![அரவிந்த் சாமி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3590311_bogan.jpg)
’கடல்’ திரைப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இந்நிலையில், அவர் யாரும் எதிர்பார்க்காத வில்லன் கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்தார். வில்லனாக ரசிகர்களுக்கு மேஜிக் காட்டியது ’தனி ஒருவன்’ படத்தில்தான். இவரது சினிமா பயணத்தின் ரீ-எண்ட்ரி என்றால் அது ’தனி ஒருவன்’ திரைப்படம்தான். மிரட்டலான நடிப்பு, ரசிகர்களை நுனிசீட்டில் உட்கார வைக்கும் வசனங்கள், இது அவருக்கு சரியான கேம் சேஞ்சர் என்றே கூற முடியும். வில்லன் அபிமன்யூவாக வந்த அரவிந்த் சாமி ரசிகர்களை திகைக்க வைத்தார். இவர் இப்படியும் நடிப்பாரா? என்று காட்சிக்கு, காட்சிக்கு வியப்பை ஏற்படுத்தினார்.
![அரவிந்த் சாமி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3590311_thani.jpg)
இப்படத்தில் இடம்பெற்ற வசனங்கள் இவருக்காகவே எழுதப்பட்டதுபோல் இருந்தன. 'இல்லாத ஒரு வாய்ப்பை உருவாக்கவும் தெரியும்... அந்த வாய்ப்பு நழுவிப் போனா அத இழுத்து தக்க வச்சுக்கவும் தெரியும்...' என்ற வசனம் இவரின் குரலில் சிலிர்ப்பை ஏற்படுத்தியது. மாபெரும் வெற்றிபெற்ற ‘தனி ஒருவன்’ படத்துக்காக சிறந்த வில்லன் விருதையும் பெற்றார். இதன்பிறகு, ’துருவங்கள் பதினாறு’ பட இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ’நரகாசூரன்’ படத்தில் நடித்தார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர காத்திருக்கிறது.
![அரவிந்த் சாமி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3590311_pampai.jpg)
தனது வாழ்க்கையில் சில சறுக்கல்களை சந்தித்தாலும் தலைநிமிர்ந்து பேசக்கூடிய அளவில் பல உயரங்களுடன் வாழ்ந்து வருகிறார். யாருக்கும் தெரியாத அவரது வாழ்க்கை பக்கங்கள் பலரையும் வியக்க வைக்கும். அவரது பேச்சுக்களை உன்னிப்பாக கவனிக்க வைத்த நேரமும் உண்டு.
![அரவிந்த் சாமி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3590311_ssamy.jpg)
தமிழ் சினிமா பற்றியும் மக்கள் மனம் பற்றியும் அரவிந்த் சாமி கூறியவை
இவை
நான் நடிகன் அரசியல்வாதி அல்ல:
தற்போது சினிமா நிறைய மாறிவிட்டது. பார்வையாளர்கள் மத்தியில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியால் சினிமா பற்றிய புரிதல் தெரிய ஆரம்பித்துவிட்டன. இளம் இயக்குநர்கள் மக்களைப் புரிந்து நல்ல வெற்றிப்படங்களைக் கொடுக்கின்றனர். நான் நடிகன் நீங்கள் ஏன் அரசியல் பற்றி கருத்து கூறவில்லை என்கிறார்கள். நான் நடிகன் என்னால் கவனத்தை மட்டுமே ஈர்க்க முடியும். என்னால் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. எனக்கு உங்களைப் பற்றிய புரிதல் இருக்கிறது. நான் ஏமாற விரும்பவில்லை. நீங்களும் யாரிடமும் ஏமாறதீர்கள் என்று பளீச்சென்று தெரிவித்தார்.
நாடு முழுவதும் மாட்டிறைச்சி பிரச்னை வந்தபொழுது ட்விட்டர் பக்கத்தில் தனது நியாயமான கருத்தை பதிவிட்டு ரசிகர்களுக்கு நானும் சமூக ஆரவலர்தான் என்று புரியவைத்தார். தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்க முடியாத அரவிந்த் சாமிக்கு ஈடிவி பாரத் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துகள்.