புதிய கல்விக் கொள்கையின்படி இந்தி பேசாத மாநிலங்களும் இந்தியை கட்டாயம் படிக்க வேண்டும் என்று கஸ்தூரி ரங்கன் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. இதனைத் தொடர்ந்து கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கையில், இந்தியை விருப்பப்பாடமாக தேர்வு செய்யலாம் என திருத்தம் செய்யப்பட்டது.
இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயம் என்று கூறியபோது, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், பஞ்சாபிலும் தமிழ் பரவுகிறது என்று ட்வீட் செய்து, தனது பாடலை ஒரு பஞ்சாபிக்காரர் பாடும் வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார்.
அதேபோன்று இந்தி விருப்பப்பாடமாக தேர்வு செய்யலாம் என்று கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கையில் , திருத்தம் செய்தபோதும், ஏ.ஆர். ரஹ்மான் ”அழகிய தீர்வு தமிழ்நாட்டில் இந்தி கட்டாயமல்ல திருத்தப்பட்டது வரைவு!" என்று ட்விட்டரில் பதிவு செய்தார்.
இந்நிலையில் இன்று, தன்னாட்சி என்று பொருள்தரக்கூடிய AUTONOMOUS என்ற வார்த்தையை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து அதற்கு, கேம்பிரிட்ஜ் ஆங்கில அகராதியில் உள்ள விளக்கத்தையும் இணைத்து பதிவிட்டுள்ளார்.
ஏ.ஆர். ரஹ்மான் சமீப காலமாக ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கிறார். அவரின் கலாய் மோட் தொடருமென அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.