பாலிவுட் திரையுலகில் நடைபெறும் உள் அரசியல் குறித்த தகவல்கள் தற்போது வெளியாக தொடங்கி உள்ளது. அதிலும் குறிப்பாக சுஷாந்த் சிங் மரணத்திற்குப் பிறகு பலரும் தாங்கள் அனுபவித்த சிரமம் குறித்து பலர் பேசிவருகின்றனர்.
இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பாலிவுட்டில் தனது வாய்ப்பை தட்டிப் பறிக்க பலரும் சதி செய்துவருவதாக சமீபத்தில் தனியார் வானொலி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.
அதில், "எனக்கு பாலிவுட் திரையுலகிலிருந்து வாய்ப்புகள் சமீபகாலமாக வரவில்லை. ஏன் வரவில்லை என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் 'தில் பேச்சரா' பட இயக்குநர் என்னிடம் உண்மையைக் கூறினார்.
அதாவது எனக்கு வாய்ப்பு கொடுக்கக்கூடாது என்று சதி வேலை நடைபெற்று வருவதாகவும், தன் படத்திற்கே உங்களை அணுக வேண்டாம் என்று பலரும் கூறியதாக ரஹ்மான் தெரிவித்தார். இதையடுத்து அவரது ரசிகர்கள் ட்விட்டரில் பாலிவுட்டில் நடைபெறும் அரசியலைச் சாடி வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நம் வாழ்வில் இழந்த பணம் மீண்டும் வரும். அதேபோல் இழந்த புகழ் மீண்டும் வரும்.
ஆனால் நாம் இழந்த நேரம் திரும்ப வராது. அதனால் அமைதியாக கடந்து செல்வதே சிறந்தது. நமக்கு இன்னும் சிறந்த விஷயங்கள் உள்ளன" என்று பதிவிட்டுள்ளார்.