சர்வதேச போதைப் பொருள் தடுப்பு தினம் உலகமெங்கும் இன்று (ஜூன் 26) கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, இளைய தலைமுறையினருக்கு போதையினால் ஏற்படும் தீங்குகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், "போதை பொருள்கள் பயன்படுத்துதல், கடத்தலுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய நாள் இன்று. இன்றைய நிலையில், நாம் அனைவருக்கும் விழிப்புணர்வு அவசியம் தேவை. கோவிட்-19இல் இருந்து நாம் விரைவில் மீண்டு விடலாம்.
ஆனால், போதைப் பொருளுக்கு அடிமையாகி விட்டால் மீள்வது சிரமம். போதைப் பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் பயங்கரமானவை. போதை தீய எண்ணங்களையும் கெட்ட நடத்தைகளையும் உருவாக்கும். இதனால் பலரின் வாழ்க்கை அழியும்.
கொடூர குற்றங்கள், வன்கொடுமைகள், சிறுவர்களின் வாழ்க்கை சீரழிப்பு போன்ற விளைவுகளை தடுக்க போதைப் பொருள்களை ஒழிப்போம். இளைய தலைமுறையை காப்பாற்றுவோம் என ஒவ்வொருவரும் சபதம் எடுத்துக்கொள்வோம்" என்று தெரிவித்துள்ளார்.