மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் பிரபல பாலிவுட் தயாரிப்பாளருமான போனி கபூர் 'நேர்கொண்ட பார்வை' படத்தை தயாரிக்கிறார். அமிதாப்பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளிவந்த 'பிங்க்' படத்தின் ரீமேக்தான் 'நேர்கொண்ட பார்வை'.
ஆனால், பிங்க் படத்தின் ரீமேக்காக இருந்தாலும் தமிழுக்கு ஏற்றாற்போல் கதையை மாற்றியுள்ளதாக இப்படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் தெரிவித்திருந்தார்.
ஹெச்.வினோத் இயக்கும் இந்தப் படத்தில் நடிகர் அஜித் குமார், வித்யா பாலன், பிரபல ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே, ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங், டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
நடிகர் அஜித், சிட்டிசன் படத்திற்கு பிறகு மாறுபட்ட வேடத்தில் வழக்கறிஞராக நடித்திருப்பதால் ரசிகர் மத்தியில் பயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் பெண்கள் சமூகத்தில் சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும் பேசப்பட்டுள்ளது.
மேலும், கடந்த சில தினங்களாக ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த 'நேர்கொண்ட பார்வை' படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது முழுவதுமாக நிறைவடைந்துவிட்டதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடிந்த நிலையில்படக்குழுவினர் தற்போது சென்னை திரும்பியுள்ளனர்.
இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த தகவல் அறிந்த அஜித் ரசிகர்கள் பயங்கர குஷியடைந்துள்ளனர்.