விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'திட்டம் இரண்டு'. த்ரில்லர் படமான இப்படத்தை தினேஷ் கண்ணன், வினோத் குமார் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
கரோனா பரவல் காரணமாக வெளியாகாமல் இருக்கும் இப்படம் நேரடியாக சோனி லிவ் ஓடிடி தளத்தில் ஜூலை 30ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது.

ட்ரெய்லரில், திட்டம் போட்டு இரண்டு கொலைகள் நடைபெறுகின்றன. அவை எதனால் நடைபெறுகின்றன, யார் செய்தார் என்பதைக் காவலராக இருக்கும் ஐஸ்வர்யா கண்டுபிடிப்பதே படத்தின் கதையாக இருப்பது போன்று தெரிகிறது.
இந்நிலையில் படம் குறித்தான தகவல்களை 'திட்டம் இரண்டு' படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

'திட்டம் இரண்டு' இதுகுறித்து தயாரிப்பு தரப்பு கூறுகைய்ல், " காவல் ஆய்வாளர் ஆதிரா சென்னைக்கு மாற்றலாகி வந்தபோது, மாநகரத்தில் தனக்காக என்ன காத்திருக்கிறது என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. கொலை செய்யப்பட்டதாக கருதப்படும் குழந்தைப் பருவ நண்பனுக்கான அவரது தேடல், எதிர்பாராத திருப்பங்களுடன் கூடிய புதிராக மாறுகிறது.
சென்னைக்கு பணி மாற்றம், பேருந்து பயணத்தில் சக பயணியின் மீது காதல் என ஆதிராவின் வாழ்க்கை நன்றாக சென்றுகொண்டு இருக்கிறது. ஆனால், குழந்தைப் பருவ நண்பன் சூரியா காணாமல் போனதாக வரும் ஒரு தொலைபேசி அழைப்பு அனைத்தையும் தலைகீழாக மாற்றுகிறது.

சூர்யாவின் கார் விபத்தை விசாரிக்கும் ஆதிரா, இதில் ஏதோ சூழ்ச்சி இருப்பதாக உணர்கிறார். இந்த வழக்கை ஆதிரா எப்படி கையாள்கிறார், இதில் அவர் வெற்றிபெற்றாரா என்பதே மீதி கதை என்றனர்.
தொடர்ந்து படத்தின் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் கூறுகையில், சமூகத்தில் உள்ள சில நிகழ்வுகளை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை இந்த படம் காட்டுகிறது. அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இப்படத்தை மக்களிடம் கொண்டு செல்ல மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். சோனி லிவ்வில் திட்டம் இரண்டு வெளியாவதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி என்றார்.

'திட்டம் இரண்டு' படம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது, " 'திட்டம் இரண்டு' படத்தில் எனது கதாபாத்திரம் பல அடுக்குகளைக் கொண்டது. இந்தக் கதையின் சாராம்சம் என்னை வெகுவாக கவர்ந்தது.
நண்பனின் மறைவில் உள்ள ரகசியத்தை கண்டுபிடிக்க ஒருவர் எந்த எல்லைக்கு செல்வார் என்பதை இந்தப் படம் கூறும் விதம் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.

படத்தில் உள்ள திருப்பங்கள் பார்ப்பவர்களை ஆச்சர்யப்படுத்தும். சோனி லிவ் ஓடிடியில் இதுவே எனது முதல் படம். திட்டம் இரண்டின் வெளியீட்டுக்காக நான் ஆவலாக உள்ளேன் என்றார்.
இதையும் படிங்க: கொலையாளிகளை வெறித்தனமாகத் தேடும் ஐஸ்வர்யா ராஜேஷ்