'பாகுபலி' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்' (ஆர். ஆர். ஆர்)
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், அலியா பட் உள்ளிட்டோர் நடித்துவரும் இப்படத்தை டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கிறது.விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் இறுதிக்கட்டப் பணி கரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் நடிகை ஸ்ரேயா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது. ஆனால் அது குறித்து முறையான அறிவிப்பு வெளியாகாததால் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.
இதனிடையே நடிகை ஸ்ரேயா சமீபத்தில் தனது சமூகவலைதள பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். அப்போது நெட்டிசன் ஒருவர் 'ஆர். ஆர். ஆர்' படத்தில் நடிக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ஸ்ரேயா, 'ஆம் அந்தப் படத்தில் நடிக்கிறேன். ராஜமெளலி எப்போது படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என்பதை தெரிவித்தவுடன், இந்தியாவுக்கு வர உள்ளேன்" என்று கூறியுள்ளார்.