தமிழ் சினிமாவில் 'கடலோரக் கவிதைகள்' படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ரேகா. அதன்பின் 'புன்னகை மன்னன்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடித்துள்ளார். தற்போது வெளியாகும் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் ரேகா நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், "என் தந்தைக்கு நான் சினிமாவில் நடிப்பது பிடிக்காது. நான் நடித்த ஒரே ஒரு படத்தை மட்டுமே அவர் பார்த்துள்ளார். ஆனாலும் நான் அவர் மீதும், அவர் என் மீதும் வைத்திருந்த அன்பு என்றும் மாறவில்லை" என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "எனது தந்தை இறந்த பின் அவருக்காக கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் கல்லறை எழுப்பி உள்ளேன். அவரை அடக்கம் செய்த இடத்தில் வேறுயாரையும் அடக்கம் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டேன். ஏனென்றால் அந்த இடத்திற்குப் பக்கத்தில், நான் இறந்த பிறகு என்னையும் அடக்கம் செய்ய வேண்டும் என்றும், அதற்கான ஏற்பாடுகளை தான் முன்னரே செய்துள்ளேன்" என்று ரேகா உருக்கமாக தெரிவித்தார்.
நடிகை ரேகாவின் பேச்சு, கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.