தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் அல்லு அர்ஜூனுடன் நடித்து வெளியான 'அல வைகுந்தபுரம்மலு' சூப்பர் ஹிட் ஆனது. இதைத்தொடர்ந்து தற்போது பிரபாஸூடன் 'ராதே ஷ்யாம்' படத்தில் நடித்து வருகிறார்.
பூஜா ஹெக்டே ஏற்கனவே தமிழில் வெளியான 'முகமூடி' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். தற்போது இவர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'பீஸ்ட்' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் மூலம் அவருக்கு தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது பாலிவுட்டில் சல்மான் கான், ரன்வீர் சிங்குடனும் நடித்துவருகிறார்.
இப்படி டோலிவுட், கோலிவுட், பாலிவுட் என இந்திய சினிமா துறையில் பிஸியாக வலம் வரும் பூஜா ஹெக்டே தற்போது தனது நண்பர்களுடன் சேர்ந்து 'ஆல் அபோட் லவ் (all about love)' என்னும் அறக்கட்டளையை தொடங்கியுள்ளார்.
இதன் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு உதவ இருப்பதாக பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார். இந்த அறக்கட்டளையின் செயல்பாட்டு பணிகள் குறித்து பூஜா ஹெக்டே கூறுகையில், "இந்த அறக்கட்டளை இப்போது சில காலமாகதான் உள்ளது, என்றாலும் கரோனா தொற்று பரவலுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டோம்.
அறக்கட்டளை மூலம் சில பணிகளை செய்யும் வரை இது தொடர்பாக நான் வெளியில் எதும் பேசவில்லை.
மக்கள் எனக்கு அளிக்கும் பணத்தை எதாவது ஒரு வழியில் மக்களுக்கு திருப்பித் தர வேண்டும் என எண்ணினேன். அதன் பலன் தான் இந்த அறக்கட்டளை பணிகள். அன்பு சேவையால் புதிய கலாசாரத்தை உருவாக்க விரும்புகிறேன்.
எனது வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கை இந்த அறக்கட்டளைக்கு ஒதுக்கி, அதன் மூலம் இந்த சமூகத்திற்காக சில தொண்டுகளை செய்ய முடிவெடுத்துள்ளேன். இந்த அறக்கட்டளையை ஆரம்பித்த போது அன்பு இந்த உலகின் எவ்வளவு பெரிய உணர்ச்சி, சக்தி என்பதை உணரத் தொடங்கினேன்.
நாம் காட்டும் சிறிய வகையிலான அன்பு ஒருவரின் வாழ்க்கையை மாற்றும் வல்லமை படைத்தது. ஒரு சிறிய விஷயம் ஒருவரின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை" என்றார்.
கரோனா பரவல் காலத்தில் பூஜா ஹெக்டே உதவி தேவைப்பட்டவர்களுக்கும், ஏழை- எளிய மக்களுக்கும் மருத்துவம், உணவு உள்ளிட்ட பல்வேறு சமூக சேவையை தனது நண்பர்களுடன் செய்து வந்தார்.
இதையும் படிங்க: சிரித்த முகத்துடன் கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட பூஜா ஹெக்டே!