மத்திய அரசு அறிவித்த சுற்றுச்சூழல் வரைவுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாகத் திரையுலகைச் சேர்ந்த கார்த்தி, சூர்யா என்று பலரும் இதற்குக் எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.
அந்த வரிசையில் தற்போது புதிதாக 'மீசைய முறுக்கு' படத்தின் நாயகி ஆத்மிகா இணைந்துள்ளார். இதுகுறித்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, "மத்திய அரசின் சுற்றுச்சூழல் வரைவு குறித்து தெரிந்துகொள்வதற்காக அதனை நான் முழுவதுமாக படித்தேன். முழுவதும் படித்த பிறகு அதில் எனக்கு ஏராளமான எதிர்ப்புகள் இருந்தது.
இது சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது அல்ல. இது மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்தேன். அதனால் எனது கருத்தை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்து வெளியிட்டுள்ளேன்.
இதேபோன்று நீங்களும் சுற்றுச்சூழல் வரைவை மறக்காமல் படித்துவிட்டு உங்களுடைய கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும். இப்படி ஒரு விஷயம் இருப்பது பலருக்கும் தெரியாது. அவர்களுக்கு நீங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
சுற்றுச்சூழல் வரைவு குறித்து உங்களது கருத்தை தெரிவிக்க வேண்டிய கடைசி நாள் ஆகஸ்ட் 11ஆம் தேதி ஆகும். காலம் மிகவும் குறைவாக இருப்பதால் அனைவரும் உடனடியாக தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்து, மற்றவர்களுக்கும் இதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஓட்டுப்போடுவது மட்டும் நமது கடமை கிடையாது, இது போன்ற புதிய சட்டங்கள் வரும்போது கருத்துகளை தெரிவிப்பதும் ஒரு கடமை தான்.
மிகவும் முக்கியமான விஷயம் இது, நமக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே தயவு செய்து அனைவரும் படித்து கருத்துகளைக் கூறுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.