கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பொது மக்கள் அத்தியாவசியத் தேவைகள் தவிர வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பலரும் வாகனங்களில் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க செல்வதாகக்கூறி ஊர் சுற்றித் திரிகின்றனர். அவர்களை கட்டுப்படுத்தும் விதமாக காவல்துறையினர் இரவு, பகல் பாராமல் உழைத்துவருகின்றனர்.
இவர்களின் சேவையை சாதாரண மக்கள் தொடங்கி திரையுலக பிரபலங்கள் வரை அனைவரும் பாராட்டிவருகின்றனர். அந்தவகையில் நடிகர்கள் தாமு, ஸ்ரீகாந்த், காவல் துறையினரைப் பாராட்டி வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளனர். அதில், “தமிழகத்தில் இரவு, பகல் பாராமல் தங்களுக்கு வழங்கப்படுகின்ற குறைவான பாதுகாப்பிலும், சிறப்பாக காவல் துறையினர் பணியாற்றிவருகின்றனர். குறிப்பாக பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்குக் கரோனா நோய் தாக்கப்பட்ட செய்தியைக் கேட்டு மனமுடைந்தது.
அவர்கள் விரைவில் மீண்டு வர வேண்டும். காவல்துறையினர் தங்களது குடும்பத்தினர், உறவினர்களுடன் நேரத்தைச் செலவிடாமல், பொது மக்களின் பாதுகாப்பிற்காக உழைத்து வருவதைக் கண்டு தலைவணங்குகிறோம்” என்று கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டேனா?- இயக்குநர் பாரதிராஜா விளக்கம்