சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்திற்குக் கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றது.
இந்த நிர்வாகிகளின் பதவிக்காலம் 2018ஆம் ஆண்டு அக்டோபரில் முடிவடைந்த நிலையில், செயற்குழு ஒப்புதலுடன் பதவிக்காலம் 6 மாதம் நீட்டிக்கப்பட்டது. அதன்பின்னர் 2019ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. நடிகர் விஷால் தலைமையில் பாண்டவர் அணியும், ஐசரி கணேஷ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டனர்.
பாண்டவர் அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு நாசரும் பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலும் பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் போட்டியிட்டனர். துணைத் தலைவர்கள் பதவிக்கு இந்த அணியின் சார்பில் பூச்சி முருகனும் நடிகர் கருணாஸும் போட்டியிட்டனர். சுவாமி சங்கரதாஸ் அணி சார்பில் தலைவர் பதவிக்கு கே. பாக்யராஜூம் பொதுச் செயலர் பதவிக்கு ஐசரி கணேஷூம் பொருளாளர் பதவிக்கு நடிகர் பிரசாந்த்தும் போட்டியிட்டனர். துணைத் தலைவர் பதவிகளுக்குக் குட்டி பத்மினி, உதயா ஆகியோர் போட்டியிட்டனர்.
தேர்தல் ஆணையராக ஓய்வுபெற்ற நீதிபதி!
தபால் ஓட்டுகளையும் சேர்த்து வாக்களிக்கத் தகுதியுள்ள 3173 பேரில் 1604 பேர் ஓட்டுப் போட்டனர். இந்நிலையில் பதவிக்காலம் முடிந்த ஓய்வுபெற்ற நீதிபதி இ.பத்மநாபனைத் தேர்தல் அலுவலராக நியமித்துத் தேர்தலை அறிவித்துள்ளது சட்டவிரோதமானது என்றும், சங்க உறுப்பினர்கள் பலர் நீக்கப்பட்டுள்ளதால், முறையான வாக்காளர் பட்டியலைத் தயாரித்து நியாயமாகத் தேர்தல் நடத்தக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் நடிகர் ஏழுமலை, பெஞ்சமின் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
மேலும் வாக்காளர் பட்டியிலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து 61 உறுப்பினர்கள் அளித்தப் புகாரின் அடிப்படையில், நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்தி வைக்க மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்தும், தேர்தலை நடத்த பாதுகாப்புக்கோரியும் பொதுச் செயலாளர் என்ற முறையில் நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்குகளில் பதிவாளர் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தும், தேர்தலை நடத்தவும் அனுமதித்த நீதிமன்றம், வாக்கு எண்ணிக்கையை நடத்தக் கூடாது எனவும் உத்தரவிட்டது. அதன்படி, திட்டமிட்டப்படி 2019, ஜூன் 23ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி, வாக்கு எண்ணிக்கை நடத்தப்படாமல், வாக்குப்பெட்டிகள் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணிக்கைக்குத் தொடர்ச்சியாகத் தடைகள்
இதற்கிடையில், ஜூன் 23-ல் நடத்தப்பட்ட தேர்தலில் வாக்குரிமை மறுக்கப்பட்டதாகக் கூறி, நடிகர் சங்கத்துக்கு நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்யக்கோரி நடிகர் சங்க உறுப்பினர்கள் ஏழுமலை, பெஞ்சமின் வழக்குத் தொடர்ந்தனர். நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாகத் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் நடிகர் சங்கத்தின் அனைத்து வழக்குகளின் தீர்ப்பும் கடந்த மாதம் பிப்ரவரி 23ஆம் தேதி வழங்கப்பட்டது.
அதில் நடிகர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைகளை 3 வாரத்திற்குள் நடத்த வேண்டும் எனவும்; 4 வாரத்திற்குள் மேல்முறையீடு செய்யலாம் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில் நடிகர் சங்கத்தின் மேல்முறையீடு மனு உச்ச நீதிமன்றத்தில் கடந்த மார்ச் 16ஆம் தேதி ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள குட் ஷெப்பர்ட் பள்ளியில் காலை 8 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இதில் 24 செயற்குழு உறுப்பினர்கள், ஒரு தலைவர், 2 துணைத் தலைவர், ஒரு பொருளாளர் மற்றும் ஒரு பொதுச்செயலாளர் பதவிகள் என மொத்தம் 29 பதவிகளுக்கான வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில் பாண்டவர் அணி சார்ந்த தலைவர், துணைத்தலைவர்கள் பொருளாளர் மற்றும் பொதுச் செயலாளர் வெற்றி பெற்றுள்ளனர்.
நடிகர் சங்கத்தின் தலைவரானார் நாசர்
இதில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு நாசர் 1701 வாக்குகளும், பாக்கியராஜ் 1054 வாக்குகளும் பெற்றனர். 647 வாக்குகள் வித்தியாசத்தில் பாண்டவர் அணி சார்பில் நாசர் வெற்றி பெற்றார். தொடர்ந்து பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட விஷால் 1720 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட கார்த்தி 1827 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
மேலும் துணைத்தலைவர் பதவிக்குப் பாண்டவர் அணி சார்பாகப் போட்டியிட்ட பூச்சி முருகன் 1612 வாக்குகளும் கருணாஸ் 1605 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர். நிர்வாகிகள் பதவி அனைத்தையும் பாண்டவர் அணி கைப்பற்றியது. மேலும் 24 செயற்குழு உறுப்பினர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க:Love Story: கடல் கடந்த காதல்... உசிலம்பட்டி மருமகளான இங்கிலாந்துப் பெண்!