கருத்து காமெடிகளின் மூலமாக தமிழ் சினிமாவில் தனி பெயர் எடுத்தவர் நடிகர் விவேக். சமீபத்தில் இவர் தாராள பிரபு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் அவதாரம் திரைப்படத்தில் உள்ள தென்றல் வந்து தீண்டும்போது என்ற பாடலை தனது பியானோவில் வாசிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அது குறித்து குட்டி கதை ஒன்றை விவேக் கூறுகையில், "1976ஆம் ஆண்டு முதல் இளையராஜா எனது மானசீக குரு. அந்த காலத்தில் பியானிஸ்ட் ஒருவர் அவரது ஹார்மோனிய பெட்டியை எனது பாட்டியிடம் அடமானம் வைத்துவிட்டுச் சென்றார். அதன் பிறகு அந்த ஹார்மோனிய பெட்டியை அவர் மீட்டுச் செல்லவில்லை. அது ஒரு ஜெர்மானிய ஹார்மோனியப் பெட்டி. எங்கள் வீட்டில் சரஸ்வதி பூஜை வரும்போதெல்லாம் அந்தப் பெட்டிக்கு குங்குமம் வைத்து பூஜை செய்துவிட்டு வைத்துவிடுவோம். நான் இளையராஜாவின் இசையைக் கேட்டுக் கேட்டு இசையின் மீது அதிக நாட்டம் ஏற்பட்டது. அதன் பிறகு நானே பாடுவதற்கும் இசையை மீட்பதற்கும் பல முயற்சிகள் செய்து பழகிக்கொண்டேன். இசை என்பது என்னுடைய பேஷன். என்னுடைய நடிப்புதான் மக்களுக்கு தெரியும். ஆனால், என்னுடைய மறுபக்கம் என்பது இசைதான். 20 ஆண்டுகளாக ஹார்மோனியம் வாசித்துக் கொண்டிருக்கிறேன். இப்பொழுது பியானோ வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
இளையராஜாவின் பாடல்கள் தான் எனக்கு மானசீக குரு. அதன் மூலம் கற்றுக்கொண்ட கேள்வி ஞானத்தால் இசையை அறிந்து கொள்ள முயன்றேன். இளையராஜா எந்தெந்த பாடல்களுக்கு என்னென்ன ராகத்தை பயன்படுத்தி உள்ளார் என்பதை கர்நாடக இசை மேதைகளிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு அதன் மூலம் எனது ராகம் குறித்த அறிவை வளர்த்துக்கொண்டேன். இளையராஜாவின் கிளாசிக் ஹிட் பாடல் என்றால் எனக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பிடித்த பாடல் 'அவதாரம்' படத்தில் இடம்பெற்ற "தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல" என்ற பாடல்தான். இதுவரை இந்தப் பாடலை நான் வாசித்து பார்த்தது இல்லை. இந்த ஊரடங்கு காலத்தில் நிறைய நேரம் இருந்ததால் இந்தப் பாடலை இசைக்க வேண்டும் என்று விரும்பினேன். பாடல் கொஞ்சம் கஷ்டமான பாடல் தான் என்றாலும் கடந்த மூன்று நாள்களாக சிறுது சிறுதாக பாடலை பயிற்சி செய்து வருகிறேன். ஆக எந்தப் பாடலாக இருந்தாலும் நான் வாசிக்க வேண்டும் என்று விருப்பப்பட்டால் அந்தப் பாடலை இரண்டு அல்லது மூன்று நாள்களுக்குள் திரும்பத் திரும்பக் கேட்டு பயிற்சி செய்து கற்றுவிடுவேன். நான் முறையாக இசையைக் கற்கவில்லை. ஆனாலும் இசையின் மீதுள்ள தீராத காதலால் இசை வாத்தியங்களை என்னுடன் வைத்துக் கொண்டு அவ்வப்போது பிடித்த ராகங்களை இசைத்து வருகிறேன்" என்றார்.
இதையும் படிங்க... 'உயிரிழந்தவரின் உடலில் இருந்து கரோனா பரவாது'- நடிகர் விவேக்