நடிகர் விவேக் ஏப்ரல் 15ஆம் தேதி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். தடுப்பூசி எடுத்துக் கொண்ட அடுத்த நாள் அவருக்கு மாரடைப்பு, மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதனையடுத்து அவர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் விவேக் ஏப்ரல் 17 ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
நடிகர் விவேக் கரோனா தடுப்பூசி செலுத்தியதால் தான், மாரடைப்பு ஏற்பட்டது என பலரும் குற்றஞ்சாட்டினர். இதனிடையே விழுப்புரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன், விவேக் கரோனா தடுப்பூசி செலுத்தியதால் உயிரிழந்ததாகத் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு அளித்தார்.
இந்தப் புகார் மனுவைத் தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. இந்நிலையில் நடிகர் விவேக் மரணத்திற்கு அவர் தடுப்பூசி செலுத்திக்கொண்டது காரணம் இல்லை எனத் தேசிய தடுப்பூசி ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.
மேலும், “உயர் ரத்த அழுத்தம் காரணமாக ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்தார்” என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தாதா சாகேப் பால்கே விருது வாங்கும் 'அண்ணாத்த' ரஜினி!